வடமாகாணம்

கிளிநொச்சியில் பெயர் பலகையுமின்றித் திடீரென அமைக்கப்பட்ட காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகம்

பீரிஸ்- சுமந்திரன் சந்திப்பின் ஊடான சதியா என்று உறவினர்கள் சந்தேகம்
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 21 22:29
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 22 00:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் திடீரென யாருக்குமே தெரியாமல், இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெயர் பலகைகூட இல்லாமல் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதெனவும், இது வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எஸ்.பீரிஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் இரகசியச் சந்திப்பின் ஊடாக வெளிப்பட்டுள்ள சதி நடவடிக்கை என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்திய உறவினர்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான கடந்த 12 வருடங்களாக, இலங்கை அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்ததாகவும், உரிய நடவடிக்கைகளை கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.

தற்போது கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவை மையமாகக் கொண்ட இலங்கை அரசாங்கத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து காப்பாற்றவே சுமந்திரன்- பீரிஸ் சந்திப்பு நடந்ததென்றும் அடுத்து வரும் நாட்களில் அமைச்சர் பசில் ராஜபக்சவை சுமந்திரன் சந்திக்கக்கூடுமெனவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் அமைக்கப்பட்ட காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகத்திற்கு வடக்குக் கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன.

இந்த அலுவலகத்தில் குறிப்பிட்ட சிலரைத் தவிர வேறெவரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள், கணவன்மார் பற்றி முறைப்பாடு எதனையும் செய்யவில்லை.

அத்துடன் இந்த அலுவலகம் அவசியமில்லை என்றும் இதனை மூடுவோமெனவும் ராஜபக்ச அரசாங்கம் கூறி வந்தது. இந்தவொரு நிலையில், ஜெனீவாவைத் திருப்திப்படுத்தும் நோக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் இந்த அலுவலகம் திறக்கப்பட்டதாக பிரதேச மக்களும் கூறுகின்றனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவான அரசியல் தீர்வுக்கு தமிழரசுக் கட்சியும் அதனை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணங்கியுள்ளமைக்கான முதற் படியா இந்த அலுவலகம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டமைக்கான காரணமென்ற பலமான கேள்விகளும் தாயகப் பிரதேசங்களில் எழுந்துள்ளன.

இதேவேளை, அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ச கடந்த யூன் மாதம் 20 ஆம் திகதி இணையவழி ஊடாக சுமந்திரனுடன் இரகசியமாக உரையாடியிருந்தார் என்பதையும், கொழும்பில் கடந்த ஒன்பதாம் திகதி அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் அவர் முன்னிலையிலேயே அமைச்சர் பீரிஸ் சுமந்திரனைச் சந்தித்திருந்தார் என்பது குறித்தும் கூர்மைச் செய்தித் தளம் செய்திக் கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்தது.