மன்னார்

திருக்கேதீஸ்வரம் சிறுவர் இல்லத்தில் கொவிட் தொற்று

உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்திய அதிகாரி தகவல்
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 22 21:57
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 24 20:25
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரம் சிறுவர் இல்லத்தில் கொவிட் தொற்றுக்கு உள்ளான 25 சிறுமிகளும் 2 சிறுவர் இல்ல மேற்பார்வையாளர்களும் தாராபுரம் துருக்கி சிட்டி கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்திற்கு மேலதிக பராமரிப்பிற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவிற்கான பொறுப்பதிகாரி வைத்திய நிபுணர் கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் உள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளுக்கு கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக, அச்சிறுமிகள் மூவரும் அடம்பன் மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
இந்த நிலையில் அடம்பன் வைத்தியசாலையில் குறித்த மூன்று சிறுமிகளுக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சிறுமிகள் மூவரும் கொவிட் -19 நோய் தொற்றினால் பீடிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியர் நிபுணர் கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

இதையடுத்து திருக்கேதீஸ்வரம் சிறுவர் இல்லத்திற்கு சனிக்கிழமை பிற்பகல் விஷேட மருத்துவக் குழு அனுப்பிவைக்கப்பட்டு குறித்த சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள மிகுதியான 51 சிறுமிகளுக்கும் குறித்த சிறுவர் இல்லத்தில் மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றும் இரண்டு பெண்களுக்கும் துரித அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டவேளை, அங்கு மேலும் 22 சிறுமிகளும் 2 பெண் மேற்பார்வையாளர்களும் கொவிட் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக வைத்திய நிபுணர் கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட திருக்கேதீஸ்வரம் சிறுவர் இல்லத்தின் 25 சிறுமிகளும் அங்கு மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றிய இரண்டு பெண்களும் நேற்று சனிக்கிழமை மாலை 7.30 க்கு மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டி கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்திற்கு மேலதிக பராமரிப்பிற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் விஷேட சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் கசுன் ஜெயசுந்தர தலைமையிலான விஷேட மருத்துவக் குழுவினர் தாராபுரம் துருக்கி சிட்டி கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்திற்கு சென்று கொவிட் தொற்றுக்குள்ளான சிறுமிகளை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன், சிறுமிகள் அனைவரும் குறித்த மருத்துவக் குழுவினரின் நேரடிக் கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவிற்கான பொறுப்பதிகாரி வைத்திய நிபுணர் கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் சிறுவர் இல்லமொன்றில் உள்ள சிறுமிகள் அநேகர் ஒரே சமயத்தில் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளான சம்பவம் இதுவே முதன் முறை என்பதுடன் மன்னாரில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிபிடத்தக்கது.