இலங்கைத்தீவில்

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய இடமில்லாத அவலம்

இராணுவத்தின் ஒத்துழைப்பைக் கோரியுள்ள சுகாதாரத்துறை
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 22 09:24
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 24 20:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொள்வதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன. தற்போது இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் மஜ்மா நகரின் சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
 
இந்தநிலையில் தற்போது இலங்கையில் வேகமாக பரவிவரும் கொவிட் நோய் தொற்றினால் நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அதிக உயிரிழப்பு காரணமாக தினமும் அதிக எண்ணிக்கையான சடலங்கள் மட்டக்களப்பு மஜ்மா நகரில் உள்ள சூடுபத்தினசேனை எனும் இடத்திற்கு அடக்கத்திற்காக தினமும் எடுத்து வரப்படுகிறது.

சூடுபத்தினசேனையில் தினமும் 30 சடலங்கள் வரை அடக்கம் செய்யப்படும் நிலையில் கடந்த வியாழன் அன்று கொவிட்டினால் மரணித்த 50 பேர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய நிலையில் கொவிட்டினால் மரணிக்கும் சடலங்களை தொடர்ந்தும் சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்வதற்கான நிலப்பரப்பு மிக வேகமாக குறைந்து வருவதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஏ. எம். நௌபர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் இலங்கை இராணுவத்தினரும் சுகாதாரத்துறையினரும் கொவிட்டினால் மரணிக்கும் பொதுமக்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வேறு பொருத்தமான இடங்களை கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தில் வாங்கமம் பகுதியில் ஐந்து ஏக்கர் விஸ்தீரணத்தில் இடமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் இறக்காமம் பிரதேச சபைத் தலைவர் எம்.எஸ்.ஜமீல் காரியப்பர் கூர்மைச் செய்தி தளத்திற்கு தெரிவித்தார்.

குறித்த ஐந்து ஏக்கர் காணியில் சுமார் 2400 உடல்களை அடக்கம் செய்யமுடியும் என குறித்த இடத்தைப் பார்வையிட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பகுதியிலும் பொருத்தமான இடங்களை அடையாளம் காணும் முயற்சியில் படைத்தரப்பினரும் சுகாதாரத்துறையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா நோயினால் மரணமடைபவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் ஓட்டமாவடிப் பகுதியில் உள்ள பிறிதொரு இடத்தில் அடக்கம் செய்வது தொடர்பாகவும் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுவதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மஜ்மா நகர் சூடுபத்தினசேனையில் கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதியில் இருந்து கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை வரை கொரோனாவினால் மரணமடைந்த 1971 பேர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில் 1819 உடல்கள் முஸ்லிம்களுடையது. 73 உடல்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுடையது. மேலும் பௌத்த மதத்தைச் சேர்ந்த 45 பேர்களின் உடல்களும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 34 பேர்களின் உடல்களும் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவரும், சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் என இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகளும் உள்ளடங்களாக 1971 உடல்கள் மஜ்மா நகர் சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.