வடமாகாணம்

மன்னார் மடுப் பிரதேசத்தில் மரக் கடத்தல் அதிகரிப்பு

பெறுமதியான மரங்கள் அழிக்கப்படுவதாகக் கவலை
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 24 12:07
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 26 00:42
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசத்தின் பல பகுதிகளிலும் உள்ள வனப்பகுதிகளை இரவு வேளைகளில் ஆக்கிரமிக்கும் மரக் கடத்தல் கும்பல்கள் அங்கிருந்து சட்டவிரோதமாகக் காட்டு மரங்களை வெட்டி வேறு பிரதேசங்களுக்கு கடத்தி வருவதாக மாந்தை பிரதேச சபையின் தவிசாளர் இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதினால் மரக்கடத்தல் கும்பல்கள் இரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் ஊடுருவி பலகைகளுக்காக பெறுமதி வாய்ந்த மரங்களை வகை தொகையின்றி வெட்டி சாய்ப்பதாகவும், அத்துடன் அவற்றை விற்பனைக்காக மிகவும் லாகவமாக நாட்டின் வேறு பகுதிகளுக்கு இவர்கள் கனரக வாகனங்கள் மூலம் கடத்துவதாகவும் மாந்தை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

இவர்களின் இச்சட்டவிரோதச் செயற்பாடுகளினால் மடு வனப்பகுதிகளில் உள்ள பாலை, முதிரை மற்றும் கருங்காலி ஆகிய மிகப் பெறுமதி வாய்ந்த காட்டு மரங்கள் மிக வேகமாக அழிந்து வருவதாகவும் இதனை மடுப் பகுதி பொலிஸாரினாலோ இலங்கை வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினாலோ கட்டுப்படுத்த முடியாதுள்ளதாகவும் மாந்தை பிரதேச சபையின் தவிசாளர் கூறினார்.

மடுப்பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மரக்கடத்தல் கும்பல்களுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் செல்வாக்குடைய பல செல்வந்தர்கள் தொடர்புபட்டுள்ளதினால் குறித்த சட்டவிரோத மரக்கடத்தல்காரர்கள் மடுக் காட்டுப்பகுதியில் எவ்வித தடங்களும் இன்றி தமது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆர். வி ஆதி அருணாசலம் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் மடுப் பகுதியில் பல குடும்பங்கள் வறுமையுடன் போராடுவதாகவும் நாட்டில் நிலவும் கொரோனா தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் உரிய தொழில் வாய்ப்பு இல்லாததினால் எவ்வித வருமானமும் இன்றி தமது அன்றாட உணவுக்கே அவர்கள் அல்லல்படுவதாகவும் மாந்தை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.

அத்துடன் இக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு சில ஆண்கள் மடுப்பகுதியில் மரக்கடத்தல்களை மேற்கொள்ளும் கும்பல்களுடன் இணைந்து சட்ட விரோதமாகக் காட்டு மரங்களைத் தறித்தல் மற்றும் மரக்கடத்தல்கள் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.

மடுப்பகுதியில் தற்பொழுது சட்ட விரோத மணல் அகழ்வும் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த சட்டவிரோத மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துமாறு மடுப்பகுதி மக்களும் பல தடவைகள் உரிய தரப்பினரிடம் கோரிக்கைகளை முன்வைத்தும் சட்டவிரோத மணல் அகழ்வினை நிறுத்த முடியாதுள்ளதாகத் தவிசாளர் தெரிவித்தார்.

மடுப் பகுதியில் பொலிஸாரும், இலங்கை வன பாதுகாப்பு திணைக்களத்தினரும் பாரிய மரக்கடத்தல்காரர்களையும், பெரும் மணல் கொள்ளையர்களையும் தப்பவிடும் அதே சந்தர்ப்பத்தில், மடு பகுதியைச் சேர்ந்த சாதாரண ஏழை மக்கள் விறகு சேகரிப்பிற்காகவும், தேன் மற்றும் பழங்களை எடுப்பதற்காகவும் வனப்பகுதிகளுக்கு செல்லும் சமயங்களில் அவர்கள் பாதுகாக்கப்படும் வனப்பிராந்தியங்களுக்கு அனுமதியின்றி சட்டவிரோதமாகப் பிரவேசித்ததாகக் கூறி பொலிஸாரினாலும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளினாலும் கைது செய்யப்படுவதாக மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

மடுப் பகுதிக் கிராமங்களில் வசிக்கும் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பலர் பாதுகாக்கப்படும் வனப்பகுதி க்குள் அனுமதியின்றி உட்பிரவேசித்த குற்றச்சாட்டில் பொலிஸாரினாலும் இலங்கை வனபாதுகாப்பு அதிகாரிகளினாலும் கைது செய்யப்படும் நிலையில் அவர்கள் மன்னார் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.