கொவிட் நோய்ப் பரவல் கட்டுப்பாட்டில் வந்தவுடன்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏற்பாடு செய்யவும்- சுமந்திரன் அரசாங்கத்திடம் கோரிக்கை

ஆனால் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் மௌனம்
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 27 20:28
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 28 18:43
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
கொவிட் நோய்ப்பரவல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதும். மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற முறையில் சட்டத் திருத்தங்களைச் செய்து தயாராக இருக்க வேண்டுமெனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் நாளேட்டில் தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
 
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு மற்றும் அங்கத்துவக் கட்சிகளின் இணக்கத்துடன் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதா என்பது குறித்து காலைக்கதிர் செய்தியில் கூறப்படவில்லை. ஆனால் மாகாண சபைத் தேர்தல்களுக்கான சட்டங்களை ஒழுங்குபடுத்துமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வேண்டுகோள் எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் அல்லது பிரதமரிடம் விடுக்கப்பட்டதா அல்லது வாய்மொழிமூலம் பேசப்பட்டதா என்பது குறித்தும் செய்தியில் எதுவுமே கூறப்படவில்லை.

ஆனால் இது தொடர்பாக தனிநபர் நகல் சட்டமூலம் ஒன்றை 2019 ஆம் ஆண்டு சுமந்திரன் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அதுபற்றிய விபரங்களும் காலைக்கதிர் செய்தியில் விபரமாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலத்தில் அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் இல்லையேல் பழைய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்த முடியுமெனவும் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தன.

அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவான மாகாண சபை முறை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்று ஏற்கனவே தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்ட்மைப்பு தெரிவித்திருந்தது.

ஆனால் 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட்டு ஆட்சியமைத்திருந்தது. இந்தநிலையில், மீண்டும் தேர்தலை நடத்துமாறு கூட்டமைப்பு கோரியுள்ளது.

ஆனால் சுமந்திரன் கோரிக்கை விடுத்தமை தொடர்பாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் சுமந்திரன் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக எதுவுமே கூறவில்லை.

கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இலங்கைத்தீவின் ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.