வடமாகாணத்தின்

ஐந்து மாவட்டங்களிலும் கொவிட் வேகமாகப் பரவுகின்றது

புதிய சிகிச்சை நிலையங்களை அமைக்கும் பணிகள் தீவிரம்
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 29 15:34
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 29 19:35
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியான வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொவிட் -19 நோய்த் தொற்று அதி தீவிரமாகப் பரவிவரும் நிலையில், வட மாகாணத்தில் இயங்கிவரும் பல கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி வழிவதனால், மன்னார் மாவட்டத்தில் மேலும் ஒரு கொவிட்- 19 இடை நிலைச் சிகிச்சை நிலையமொன்று இலங்கை இராணுவத்தினரால் மிக வேகமாக அமைக்கப்பட்டு வருகிறது. மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளிலேயே குறித்த கொவிட்-19 இடைநிலைச் சிகிச்சை நிலையமொன்று இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வருகிறது.
 
மன்னார் மாவட்டத்தின் தாராபுரம் துருக்கி சிட்டி வீடமைப்பு திட்டப் பகுதியில் கடந்த மே மாதப் பகுதியில் பெண்களுக்கான கொவிட் இடைநிலைச் சிகிச்சை நிலையமொன்று இராணுவத்தினரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் நறுவிலிக்குளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளில் கொவிட் தொற்றுக்கு உள்ளான ஆண் நோயாளிகளுக்கான இடை நிலைச் சிகிச்சை நிலையமொன்றினை அமைக்கும் பணிகளை இலங்கை இராணுவம் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

நானாட்டான் நறுவிலிக்குளத்தில் உள்ள மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் கொவிட் இடை நிலைச் சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் மன்னார் மாவட்டம் உட்பட வட மாகாணத்தின் ஏனைய நான்கு மாவட்டங்களிலும், கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்படும் ஆண் நோயாளர்கள் குறித்த இடை நிலைச் சிகிச்சை நிலையத்திற்கு, சிகிச்சைக்காக அழைத்து வரப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

தற்போது வட மாகாணத்தில் நிலவும் கொரோனா நோய் தீவிரத்தையடுத்து மன்னார் மாவட்டத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத அரச கட்டிடங்கள் மற்றும் பொது மண்டபங்களில் மேலும் சில கொவிட் இடைநிலைச் சிகிச்சை நிலையங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.