கொவிட் நோய்ப் பரவலைக் காண்பித்து

அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி- அனைத்து அதிகாரங்களையும் கையிலெடுத்தார்

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமனம்
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 31 20:00
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 31 21:20
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
அத்தியாவசிய உணவுத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையாளக்கூடிய முறையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையொப்பமிட்ட இலங்கை ஒற்றையாட்சி அரச வர்த்தமானி இன்று செய்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவில் இருந்து அவசரகாலப் பிரகடனம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தரவின்படி இவர் இன்று நள்ளிரவில் இருந்து செயற்படவுள்ளார்.
 
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்திருப்போர் மற்றும் அதிக விலைகளுக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்களுக்கு உடனடியாக சீல் வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுதல், கொவிட் நோய்த் தாக்கம் தொடர்பாக பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, அவசரகாலச் சட்டத்தின் பிரகாரம் சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. அத்துடன் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் அனைத்தும் முடக்கும் நோக்கிலேயே கொவிட் நோய்ப் பரவலைக் காண்பித்து அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும்போது அவசரகாலச் சட்டம் தொடர்பான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளதுடன் ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்தில் சாதாரண உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளோடு அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் கூறுகின்றன.