இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து

இலங்கை செல்ல முற்பட்ட பெண் கைது

தமிழகக் கடலோரப் பொலிஸார் விசாரணை
பதிப்பு: 2021 செப். 10 13:55
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 12 13:23
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாகப் படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்ட இளம் யுவதியொருவர் கடலோரப் பொலிஸாரினால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இந்தியப் பெண்ணொருவர் உட்பட மேலும் நால்வரைக் கைது செய்துள்ளதாக இராமேஸ்வரம் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன.
 
இதுபற்றி கூர்மை செய்தித் தளத்திற்கு மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் தனுஷ்கோடிக்கு அருகாமையில் உள்ள இந்தியாவிற்குச் சொந்தமான முதலாம் மணல் தீடையில் அநாதரவான நிலையில் காணப்பட்ட இளம் பெண்ணொருவரை மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடந்த ஆறாம் திகதி திங்கள் அதிகாலை இராமேஸ்வரம் கடலோரப் பாதுகாப்பு பொலிஸார் கைது செய்தனர். பின்னர் கைதான பெண்ணிடம் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட கடலோரப் பாதுகாப்பு பொலிஸார் மேலதிக விசாரணைக்காக திங்கள் காலை குறித்த இளம் பெண்ணை இராமேஸ்வரம் மகளிர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இராமேஸ்வரம் மகளிர் பொலிஸார், குறித்த பெண் தொடர்பில் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில், இவர் இலங்கையின் வட மாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையைச் சேர்ந்த 19 வயதுடைய சிவநேசன் கஸ்தூரி எனத் தெரிய வந்துள்ளது.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலங்கையில் நிகழ்ந்த இறுதி யுத்தத்தினால் இந்தியாவிற்கு அகதியாக இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் வசித்து வந்த நிலையில் மேற்படி இளம் பெண்ணான சிவநேசன் கஸ்தூரிக்கு குறித்த இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவ்விளைஞரைப் பார்ப்பதற்காக சிவநேசன் கஸ்தூரி கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வருகை தந்ததாகவும் இராமேஸ்வரம் மகளிர் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருந்து தமிழகம் வருகை தந்த குறித்த இளம் பெண் தனது விசா காலம் முடிந்தும், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது உறவினரின் வீட்டில் சட்டவிரோதமாகத் தங்கி வசித்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் இலங்கை முல்லைத்தீவு முள்ளியவளையில் வசிக்கும் தனது தந்தைக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவரைப் பார்ப்பதற்காக இலங்கைக்கு திரும்பிச் செல்ல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அறியவருகிறது. இதன் அடிப்படையில் கடந்த மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து பேருந்து மூலம் புறப்பட்ட குறித்த யுவதி கடந்த நான்காம் திகதி சனியன்று காலை இராமேஸ்வரம் சென்றடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் குறித்த யுவதி தனுஷ்கோடியைச் சேர்ந்த முனியசாமி என்பவரைச் சந்தித்து அவர் மூலம் படகு வழியாக இலங்கை செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாகவும், அதற்காக முனியசாமிக்கு குறித்த யுவதி இந்தியப் பணம் ரூபா 30 ஆயிரத்தை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த முனியசாமி இலங்கை யுவதியான சிவநேசன் கஸ்தூரியை அன்றைய தினமான சனிக்கிழமை இரவு பாம்பன் சின்னப்பாலம் கடற்கரைக்கு வருமாறு தெரிவித்ததாகவும் அன்று முனியசாமியின் ஏற்பாட்டில் தயராக இருந்த இந்திய மீன் பிடிப் படகில் இலங்கைக்கு செல்வதற்காக குறித்த இலங்கை யுவதி பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த பெண் பாம்பனில் இருந்து இந்திய மீனவப் படகு மூலம் கடந்த திங்கள் அதிகாலை சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்வதற்காகப் பயணித்தவேளை தனுஷ்கோடிக் கடற்பரப்பில் கடலோரக் காவற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததைக் கண்னுற்ற படகோட்டி இந்தியக் கடல் எல்லையில் உள்ள முதலாம் மணல் திட்டில் குறித்த பெண்ணை இறக்கிவிட்டுத் தப்பிச்சென்றதாகக் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதியை தனது படகில் ஏற்றிய படகோட்டி தனது படகை இலங்கையை நோக்கி செலுத்தாது நீண்ட நேரம் பாம்பன் கடற்பரப்பைச் சுற்றி வந்து இலங்கை வந்துவிட்டதாக யுவதியிடம் தெரிவித்தே தனுஷ்கோடியின் அருகில் உள்ள முதலாம் மணல் தீடையில் யுவதியை இறக்கிவிட்டுச் தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மகளிர் பொலிஸார் குறித்த இலங்கை தமிழ் யுவதியை படகு மூலம் கடல் மார்க்கமாக இலங்கைக்கு அனுப்புவதாக கூறி அவரிடம் பணம் பெற்று ஏமாற்றிய தனுஷ்கோடியைச் சேர்ந்த முனியசாமி மற்றும் மேற்படி மோசடிக்கு உடந்தையாக இருந்த படகோட்டி மற்றும் அவரின் நண்பர் இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண்னொருவர் அடங்கலாக நால்வரை கடந்த திங்கள் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில் ஏலவே மணல் தீடையில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் யுவதியான சிவனேசன் கஸ்தூரி மற்றும் கைதான ஏனைய நாலு இந்தியர்கள் உட்பட ஐவரும் இன்று செவ்வாய் காலை இராமேஸ்வரம் நீதிமன்றில் பொலிஸாரினால் ஆஐர்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் இராமேஸ்வரம் நீதிமன்றம் இலங்கை யுவதி உட்பட கைதான ஐவரையும் தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.