வடமாகாணம்

மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் பதவி நீக்கம்

விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் ஆளுநர் உத்தரவு
பதிப்பு: 2021 செப். 14 22:32
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 16 00:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டம் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீட் முகம்மது முஜாகீர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் வட மாகாண ஆளுநரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்றுத் திங்கட்கிழமை மாலை வெளியிடப்பட்ட இலங்கை விசேட வர்த்தமானியில் வட மாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸினால் குறித்த பதவி நீக்க அறிவித்தல் பிரசூரிக்கபட்டுள்ளதுடன் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் இவரின் பதவி வரிதாக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்படடுள்ளது.
 
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீட் முகம்மது முஜாகீர் தொடர்பில் அவரின் ஒழுங்கீனங்கள் மற்றும் தகுதியின்மை குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக வட மாகாண ஆளுநர் பீ. எஸ். எம். சார்ள்ஸினால் ஓய்வு பெற்ற நீதிபதி கந்தையா அரியநாயகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த குழுவினால் கடந்த ஒகஸ்ட் மாதம் 2ஆம் திகதி வட மாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸிடம் கையளிக்கப்பட்டது.

இத் தீர்ப்பின் அடிப்படையில் வட மாகாண ஆளுநரினால் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவி மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் பதவி ஆகியவற்றில் இருந்து சாகுல் கமீட் முகம்மது முஜாகீர் நீக்கப்பட்டுள்ளார் என வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விசேட வர்த்தமானியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள்,சட்டத்தின் 2 ஆம் பிரிவுடன் சேர்ந்து வாசிக்கப்பட வேண்டிய 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 185(1) உப பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைய எனக்களிக்கப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் அவர்களால் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் திட்டத்தின் 185 (1) உப பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைய எவையேனும் தகுதியின்மைகள் உள்ளனவா என்பது பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 185 (2) ஆம் உப பிரிவிற்கமைவாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதி அலுவலகர் கந்தையா அரியநாயகம் அவர்களின் கீழ் அமைக்கப்பட்ட தனி நபர் விசாரனைக்குழுவினால் விசாரனை செய்யப்பட்டு வாதித்தரப்பின் சாட்சியங்களைக் கவனத்தில் கொண்டதன் பின்பு தனி நபர் விசாரனைக் குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் தீர்ப்புக்களுடன் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள 02-08-2021 ஆம் திகதி இறுதி அறிக்கையின் பிரகாரம்,

சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் அவர்கள் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள், கடமைகளை நிறைவேற்றும் போது 1987 ஆண் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் உப பிரிவு 185 (1)(இ),(அ) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை புரிந்தார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன என நான் திருப்தியடைகின்றமையால்

1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க , மாகாண சபைகள் (இடை நேர் விளைவான ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவுடன் சேர்ந்து வாசிக்கப்பட வேண்டிய 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 185 (1) உப பிரிவுகளின் மூலம் எனக்களிக்கப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் வடமாகாணத்தின் ஆளுநர் பியன்சியா சறோஜினிதேவி மன்மத ராஜா சார்ள்ஸ் ஆகிய நான் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் திரு சாகுல் கமீது முகம்மது முஜாஹீர் அவர்களை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் (14-09-2021) பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் பதவியில் இருந்து நீக்கம் செய்கிறேன் என நேற்று மாலை வெளியாகியுள்ள விசேட வர்த்தமான மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.