வடமாகாணம்

மன்னாரில் தடுப்பூசி செலுத்தப்பட்ட அட்டைகளைப் பரிசோதிக்க முடிவு

மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தர்மராஜன் வினோதன் அறிவிப்பு
பதிப்பு: 2021 செப். 18 19:15
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 21 02:23
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள வீதிச் சோதனைச் சாவடிகள் ஊடாக பயணிக்கும் பொது மக்கள் தமது கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட அட்டைகளைப் படையினர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிடும் வகையில் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் எனும் புதிய நடைமுறை கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் மன்னாரில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 30 தொடக்கம் 60 வயதுடைய பெருமளவானோர் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில் கொவிட் தடுப்பூசிகளைப் பெறாதவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் நோக்கிலேயே மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீதிச்சோதனை சாவடிகள் ஊடாக பயணிப்பவர்களிடம் கொவிட் தடுப்பூசி செலுத்திய பதிவுகளைக் கொண்ட அட்டைகள் பரிசோதிக்கப்படுவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் பிரதான பாலத்தில் உள்ள பிரதான சோதனைச் சாவடி, மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் தாராபுரம் சந்தியில் உள்ள வீதிச் சோதனைச் சாவடி, வங்காலை - நானாட்டான் வீதியில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடி ஆகியவற்றின் ஊடாக பயணிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களின் கொவிட் தடுப்பூசி பதிவு அட்டைகள் படையினர் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரினால் பரிசீலனை செய்வதற்கான நடைமுறை மன்னார் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன், மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொவிட் தடுப்பூசிகளை செலுத்தியதற்கான பதிவு அட்டைகளை தம்வசம் வைத்திருக்காதவர்கள் குறித்த சோதனைச் சாவடிகளில் கடமையில் உள்ள பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் குறித்த பரிசோதனையில் கொவிட் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டால் அவர்கள் கொவிட் இடைத்தங்கள் சிகிச்சை நிலையத்திற்கு உடன் அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் முப்பது வயதில் இருந்து அறுபது வயது வரையான பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் 30 வயதில் இருந்து 60 வயதுடையவர்களில், இதுவரை 71 ஆயிரத்தி 396 பேர்கள் தமது முதலாவது கொவிட் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். அத்துடன் 56 ஆயிரத்தி 363 பேர்கள் தமக்கான இரண்டாவது கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் மன்னார் மாவட்டத்தில் செயல்படும் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் கட்டிட நிர்மாணப்பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்றும் 30ல் இருந்து 60 வயதுடைய ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் 20ல் இருந்து 30 வயதுடையவருக்கான கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன் விஷேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்தும் நோக்கில் அவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

இது இவ்விதம் இருக்க கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் 101 கொவிட் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 66 தொற்றாளர்கள் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நிறுவனமொன்றின் பணியாளர்கள்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம், முதல் கொவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதில் இருந்து இம் மாதம் செப்டம்பர் 13ஆம் திகதி வரை 1966 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் தெரிவித்தார்.