வடமாகாணம் மன்னார்

மாந்தை மேற்கில் சிறுவன் மரணம்- சந்தேகநபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்

பொலிஸார் தொடர்ந்து விசாரணை
பதிப்பு: 2021 செப். 22 18:30
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 25 00:30
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கள்ளியடியில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 22 வயதிற்கு உட்பட்ட நால்வர் மன்னார் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கள்ளியடி கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுவனின் மர்ம மரணம் தொடர்பாக இறந்த சிறுவனின் தாயார் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய கள்ளியடி கிராமத்தைச் சேர்ந்த 16, 17 , 18 மற்றும் 20 வயதுடைய நால்வரை கடந்த சனிக்கிழமை மாலை இலுப்பைக்கடவை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
 
இதையடுத்து கைதான நால்வரையும் பொலிஸார் கடந்த ஞாயிறு மன்னார் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த சமயம் நீதவான் பி. சிவக்குமார் சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மன்னார் கள்ளியடியில் வசிக்கும் பெண் கிராமசேவையாளர் ஒருவர் அங்கு அரிசி ஆலையொன்றை நடாத்தி வருகின்றார். இந்தநிலையில் கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கள்ளியடியில் வசிக்கும் 14 வயதுடைய நாகேந்திரன் டிலக்சன் எனும் சிறுவன், தனது தாயார் வழங்கிய அரிசியை திரிப்பதற்காக குறித்த அரிசி ஆலைக்கு சென்று பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இச்சூழ்நிலையில் குறித்த அரிசி ஆலையில் பணம் திருடப்பட்டதாகவும் குறித்த பணத்தை அங்கு அரிசி திரிப்பதற்காக வருகை தந்த நாகேந்திரன் டிலக்சனே திருடியுள்ளதாகவும், மேற்படி அரிசி ஆலையின் உரிமையாளரான பெண் கிராமசேவையாளரின் மகன் நாகேந்திரன் டிலக்சனின் உறவினரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரிசி ஆலைக்கு வருகை தந்த சிறுவன் பணத்தை திருடும் வீடியோ காட்சியும் தமது அரிசி ஆலையில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமராவில் பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலையில் திருடிய பணத்தை சிறுவன் டிலக்சனிடம் இருந்து பெற்றுத்தருமாறும் குறித்த அரிசி ஆலை உரிமையாளரின் மகன், சிறுவனின் உறவினர்களிடம் மேலும் கூறியுள்ளார். இந்த நிலையில் சிறுவனிடம் இருந்து திருடப்பட்ட பணத்தை மீளப்பெற்றுத்தருவதாக சிறுவனின் உறவினர்கள் அரிசி ஆலை உரிமையாளரின் மகனிடம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் அரிசி ஆலை உரிமையாளரின் மகனும் அவரின் நண்பர்கள் மூவரும் கடந்த வெள்ளி மாலை மதுபோதையில் பிராஸ்தாப சிறுவன் நாகேந்திரன் டிலக்சனின் வீட்டிற்கு சென்று திருடப்பட்ட பணத்தை தருமாறு கோரி சிறுவனை கண்மூடித்தனமாகத் தாக்கியதாகவும், இதன்போது குறித்த சிறுவனின் தாயார் தனது வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து தனது மகனை தாக்குபவர்களின் கால்களில் விழுந்து தனது மகனை தாக்கவேண்டாம் எனக் கூறி கதறி அழுததாகவும், எனினும் குறித்த நால்வரும் சிறுவனைத் தொடர்ந்து தாக்கிவிட்டு தப்பியோடியதாக இறந்த சிறுவனின் தாயாரினால் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல்தாரிகள் நால்வரும் தனது மகனைத் தாக்கிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் சிறுவனின் தாயார் சிறுவனை அசூவாசப்படுத்தி அவருக்கு இரவு உணவு வழங்கி தூங்கச் செய்துவிட்டு தனது வீட்டிற்கு வெளியே கிணற்றடிப் பக்கம் குளிக்கச் சென்றதாகவும், சிறுவனின் தாயாரால் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிது நேரத்தின்பின் குறித்த சிறுவனின் தாயார் குளித்து விட்டு மீண்டும் தனது வீட்டிற்குள் செல்லும் வேளை சிறுவனை தாக்கிய நால்வரும் குறித்த வீட்டின் உள்ளே இருந்து வளவின் பின்புறமாக ஒடிச்செல்வதை அவதானித்ததாகவும் இதையடுத்து தனது வீட்டிற்குள் ஓடிச்சென்று பார்த்தவேளை வீட்டின் பூஜை அறையில் தனது மகன் டிலக்சன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து காணப்பட்டதாகவும், இறந்த சிறுவனான நாகேந்திரன் டிலக்சனின் தாயார் இலுப்பைக்கடவைப் பொலிஸ் நிலையத்தில் அளித்த தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது மகன் தற்கொலை செய்யவில்லை எனவும் அவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் வீட்டிற்குல் அத்துமீறி நுழைந்து தனது கண் எதிரே தன் மகனை தாக்கியவர்களே மீண்டும் தமது வீட்டிற்குள் வந்து மகனை அடித்து கொலை செய்துள்ளதாகவும் மேற்படி டிலக்சனின் தாயார் பொலிஸாருக்கு வழங்கிய தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் முறைப்பாட்டின் பேரில் இலுப்பைக்கடவை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கள்ளியடி அரிசி ஆலை உரிமையாளரின் மகன் உட்பட நால்வரைக் கைது செய்தனர். இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கைதான நான்கு சந்தேக நபர்களையும் கடந்த ஞாயிறு மன்னார் மாவட்ட நீதவான் பி. விஜயக்குமார் முன்னிலையில். ஆஜர் செய்தவேளை சந்தேக நபர்களான நால்வரையும் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் எச். பி. திசாநாயக்க தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இலுப்பைக்கடவை பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதேவேளை கள்ளியடி சிறுவன், நாகேந்திரன் டிலக்சன் அரிசி ஆலையில் பணத்தை திருடியதால் அவருக்கு ஏற்பட்ட அச்சம் மற்றும் அவமானம் காரணமாகவே தூக்கிட்டு தற்கொலை செய்ததாகவும், எனினும் இலுப்பைக்கடவை பொலிஸார் சிறுவனின் தாய் அளித்த பொய் முறைப்பாட்டையடுத்து சிறுவனின் மரணத்தை கொலையாக சித்தரிக்க முற்படுவதாக அரிசி ஆலை உரிமையாளரான பெண் கிராமசேவையாளரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03ஆம் திகதி இரவு கள்ளியடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த விஜி என அழைக்கப்படும் எஸ் . விஜியேந்திரன் எனும் கிராமசேவையாளர் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் தலைமையகத்தில் பணியாற்றும் குறித்த கிராமசேவையாளரின் கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபராக கள்ளியடி அரிசி ஆலை உரிமையாளரான பெண் கிராமசேவையாளரின் கணவர் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற உத்தரவுப்படி ஐந்து மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் கள்ளியடி அரிசி ஆலையின் உரிமையாளரான பெண் கிராமசேவையாளருக்கும் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை உள்ளதாகவும், இந்த நிலையில் தற்கொலை செய்த சிறுவனின் விடயத்தை கையில் எடுத்துள்ள இலுப்பைக்கடவை பொலிஸார், முன்பு நடந்த கிராமசேவையாளரின் கொலை தொடர்பில் அரிசி ஆலை உரிமையாளரான பெண் கிராமசேவையாளருடன் இருக்கும் பகமைக்கு பழி தீர்க்கும் வகையில் சிறுவன் நாகேந்திரன் டிலக்சனின் மரணத்தை கொலையாக சித்தரித்து அரிசி ஆலையின் உரிமையாளரான பெண் கிராமசேவையாளரின் மகன் உட்பட நால்வரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக மேற்படி உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.