வடமாகாணம் மன்னார்

கோயில் மோட்டை விவகாரம்- குழப்பத்தை உருவாக்கும் தேரர்

சமய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கச் சில கச்திகள் முயற்சியெனக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2021 செப். 24 22:09
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 25 08:15
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணம் மன்னார் மாவட்டதின் மடுப்பகுதியில் உள்ள கோயில் மோட்டை எனும் விவசாய காணிகளை மாகாண ஆளுநரின் உத்தரவில் அப்பகுதி மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மாகாணக் காணி நிர்வாகத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இலங்கை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த 22ஆம் திகதி புதனன்று திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு குறித்த கோயில் மோட்டை விவசாயக் காணியை பார்வையிட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மன்னார் மாவட்டத்தின் திருக்கேதிஸ்வரம் இந்து ஆலயத்தில் கொரோனா இல்லாத இலங்கை உருவாகவேண்டும் எனும் விஷேட பூஜை நிகழ்வுகள் கடந்த புதன் மாலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மன்னாருக்கு வருகை தந்த ஞானசார தேரரை வழியில் இடைமறித்த கோயில்மோட்டை விவசாயிகள் சிலர் அவரை மடுப்பகுதிக்கு அழைத்து வந்து கோவில் மோட்டை விவசாய காணியை பார்வையிடச் செய்ததாக மடு பெரிய பண்டிவிரிச்சான் மக்கள் கூர்மைச் செய்தித்தளத்திற்கு தெரிவித்தனர்.

மேலும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பௌத்த பிக்குகளுடன் பொலிஸார் புடைசூழ கறுப்பு நிற அங்கி அணிந்த மெய் பாதுகாவலர்கள் சகிதம் வாகனப் பேரணியாக மடுவில் உள்ள கோவில் மோட்டைப் பகுதிக்கு பெரும் ஆரவாரத்துடன் வருகை தந்து குறித்த நெற் செய்கைக்கான காணியை பார்வையிட்டதாகவும் பெரியபண்டிவிரிச்சான் மக்கள் கூர்மைக்கு தெரிவித்தனர்.

மேலும் ஞானசார தேரர் அரச காணியான கோவில் மோட்டை விவசாய காணியில் நீண்ட காலமாக நெற்செய்கையில் ஈடுபடும் பொது மக்களைச் சந்தித்து இக்காணி தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அச்சமயம் சுமார் 40 வருடங்களாக தாம் குறித்த காணியில் நெற்செய்கையில் ஈடுபடுவதாகவும், இந்த நிலையில் குறித்த காணியை மடு மாதா ஆலய நிர்வாகத்தினர் தமக்கு வழங்குமாறு அரச அதிகாரிகளிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்துவருவதாகவும், இதனால் தாம் 40 வருடங்களாக நெற்பயிர் செய்கை மேற்கொண்டு வரும் குறித்த நெற் காணியை தமக்கு நிரந்தரமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொது மக்கள் ஞானசார தேரரிடம் வேண்டுகோள் விடுத்தனர்

இந்த நிலையில் குறித்த கோயில் மோட்டைக் விவசாயக் காணியை தேவாலயங்களுக்கு வழங்குவதை விட மக்களின் பசி தீர்ப்பதற்கு வழங்குவதே முக்கியமானதாகும் எனத் தெரிவித்த ஞானசார தேரர் மடுப் பகுதியில் உள்ள கோயில் மோட்டை காணியை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வதாக அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்துள்ளதாக பெரியபண்டிவிரிச்சான் மக்கள் கூர்மைச் செய்தி தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.

மேலும் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோயில் மோட்டை விவசாயக் காணியில் நெற்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் பலர், கடந்த புதன் அப்பகுதிக்கு ஞானசார தேரர் வருகை தந்தமையிட்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாண ஆளுநர் குறித்த கோயில் மோட்டை காணியை விவசாயிகளுக்கு உரிய முறைப்படி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண காணித் திணைக்களத்திற்கு உத்தரவிட்டு அதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகளினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு சிலர் அரசியல் காரணங்களுக்காக ஞானசார தேரரை இங்கு அழைத்து வந்து தேவையற்ற பிணக்குகளை ஏற்படுத்த முற்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.