வடமாகாணம்

மன்னாரில் திலீபனின் நினைவேந்தல்- பொலிஸாரின் தடையுத்தரவுக்கு நீதிமன்றம் மறுப்பு

சட்டத்தரணிகளான பிறிமூஸ் சிராய்வா, அன்ரனி றொமோள்சன் ஆகியோர் கடும் வாதம்
பதிப்பு: 2021 செப். 25 20:21
புதுப்பிப்பு: செப். 25 20:45
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் திலீபனின் நினைவு நாளான எதிர்வரும் 26 ஆம் திகதியன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனு தொடர்பில் எவ்வித தடை உத்தரவும் பிறப்பிக்காது பொலிஸாரின் கோரிக்கையை மன்னார் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திலீபனின் நினைவு தினம் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும் குறித்த நினைவு நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மன்னார் பொலிஸார் மன்னார் மாவட்ட நீதிமன்றில் இன்று 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை வழக்கொன்றை தாக்கல் செய்தனர்
 
மன்னார் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன், திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மன்னாரில் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டு குறித்த வழக்கில் பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிடப்பட்டிரிருந்தார்.

இந்த நிலையில் மன்னார் பொலிஸாரினால் தாக்கல் செய்யபட்ட குறித்த வழக்கின் பிரதிவாதியான தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரனை நேற்றுப் பிற்பகல் 1.30க்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றத்தினால் அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மன்னார் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன் மன்னார் நீதிமன்றில் முன்னிலையானார்.

இந்த நிலையில் மன்னார் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது பிரதிவாதியான வி. எஸ். சிவகரன் சார்பில் சட்டத்தரணிகள் எஸ். பிறிமூஸ் சிராய்வா, அ. அன்ரனி றொமோள்சன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகிச் சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

மன்னார் பொலிஸார் புலனாய்வுத் தகவலை அடிப்படையாக வைத்து மன்னார் நீதிமன்றில் குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். பொலிஸார் மன்றில் தெரிவிப்பது போன்று தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி மக்களை ஒன்று கூட்டி நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் மன்னாரில் மேற்கொள்ளப்படவில்லை. மன்றில் ஆஜராகியுள்ள பிரதிவாதி இதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை.

பொலிஸார் அடிப்படையற்ற தகவல்களை மையப்படுத்தி எவ்வித சான்றுகளும் இல்லாது கற்பனை வழக்கொன்றினை மன்றில் தாக்கல் செய்துள்ளனர். பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவிப்பது போன்று மன்னார் நகரில் பிரதிவாதிக்கு சொந்தமான நித்திலம் பதிப்பகத்தில் மக்களை ஒன்று கூட்டி நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தயாராகவில்லை. இந்த நிலையில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்படட விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என மேற்படி சட்டத்தரணிகள் இருவரும் மன்னார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதவான் பி. விஜயக்குமார் எவ்வித தடையுத்தரவும் பிறப்பிக்காது மன்னார் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்ததுடன் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிவரை ஓத்திவைத்துள்ளார்.