வடமாகாணத்தில் உள்ள

ஐந்து மாவட்டங்களிலும் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு

சமையல் வாயு மற்றும் சீமேந்து வகைகளுக்கும் பெரும் தட்டுப்பாடு
பதிப்பு: 2021 செப். 26 10:05
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 30 01:41
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் என்றுமில்லாதவாறு உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேற்படி ஐந்து மாவட்டங்களில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள் உணவுப் பொருட்கள் பால் மா வகைகள் உட்பட அத்தியாவசிய பண்டங்கள் பலவற்றை விலையேற்றத்தை கருத்தில்கொண்டு பதுக்கிவைத்துள்ள நிலையில் பொதுமக்கள் குறித்த பொருட்களை பெறமுடியாது திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அரிசி, கோதுமை மாவு, பால் மா வகைகள், சீனி, உளுந்து, பயறு உட்பட சமையல் வாயு மற்றும் சீமேந்து வகைகளுக்கு வட மாகாணத்தில் பலத்த தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஒரு சில இடங்களில் மேற்படி பொருட்கள் அதிக விலைக்கு பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள அரசாங்க அதிபர்கள் மற்றும் பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தட்டுப்பாடு இன்றி பொதுமக்கள் இலகுவாகப் பெறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டும், குறித்த முயற்சியில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் வட மாகாண கூட்டுறவுத் திணைக்களமும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அதிலும் பெரிய அளவு வெற்றி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் கடந்த வாரம் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு நகரங்களில் அத்தியாவசிய உணவு பொருட்கள் பால் மா வகைகள் மற்றும் ஏனைய முக்கிய பாவனைப்பொருட்கள் ஆகியவற்றை பதுக்கி கூடுதல் விலையில் விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்கள் மீது பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பால் மா வகைகள் உட்பட பொதுமக்களுக்கு தேவையான சீமேந்து பக்கட்டுகளைப் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பல வர்த்தக நிலையங்களின் களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் நிலவும் பால் மா தட்டுப்பாடு தொடர்ந்தும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என இலங்கை பால் மா இறக்குமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்திடம் குறித்த சங்கத்தினர் ஒரு கிலோ பால் மாவின் விலையை 200 ரூபாவாக அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும் இலங்கை அரசாங்கம் குறித்த வேண்டுகோள் தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்காத நிலையில் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பல நூற்றுக்கணக்கான தொன் நிறையுடைய பால் மா வகைகள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.

கோதுமை மாவு, சீமேந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் வாழ்க்கை செலவுகள் குழு அனுமதித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் சீமேந்து பக்கட் ஒன்று 50 ரூபாவினாலும் சமையல் எரிவாயு 550 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவுகள் குழுவினர் அனுமதியளித்துள்ளனர்.