இலங்கைத்தீவில்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படாது

புதிய சுகாதார விதிகள் 48 மணிநேரத்தில் அறிவிக்கப்படுமென்கிறார் சவேந்திர சில்வா
பதிப்பு: 2021 செப். 27 22:31
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 30 01:38
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாதென கொவிட் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் மாகாணங்களுக்குகிடையிலான போக்குவரத்துத் தடை உத்தரவுகள் நீக்கப்படாதெனவும் அவர் கூறினார். ஒக்டோபர் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுததல், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை குறைக்கப்படுமெனவும் சவேந்திர சில்வா கூறினார்.
 
ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் எவ்வாறு செயற்படுவது என்ற புதிய விதிமுறைகள் அடுத்த 48 மணி நேரத்தில் வெளியிடப்படுமெனவும் அதன் பிரகாரமே அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்க முடியுமெனவும் சவேந்திர சில்வா கூறினார்.

இதேவேளை, இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியவர்கள் மாத்திரமே அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்ற முடியுமெனவும் தடுப்பூசிச் சான்றிதழ்கள் இல்லாமல் எவரும் பொது இடங்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் செல்ல முடியாதெனத் தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாமென அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேரத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கைச் சுகாதார சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை இரவு அறிவித்துள்ளது.