வடமாகாணம்

மன்னாரில் படையினர் திடீர் சோதனை நடவடிக்கை

அச்சத்தில் பொது மக்கள்
பதிப்பு: 2021 செப். 30 21:52
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 30 23:50
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் இராணுவத்தினரால் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொவிட் - 19 நோய் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக பல வாரங்களாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப் படுத்தல் ஊரடங்கு நாளை முதலாம் திகதி வெள்ளிக்கிழமை தளர்த்தப்படும் நிலையில் இலங்கை இராணுவத்தினரால் மன்னார் நகரில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளினால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மன்னார் நகரின் பஸார் பகுதி மேல் நீதிமன்றம் அமைந்துள்ள பள்ளிமுனை வீதி, மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்புறமாகவுள்ள மன்னார் -தலைமன்னார் பிரதான வீதி மற்றும் எஸ்பிளேனட் வீதி ஆகியவற்றிலேயே இலங்கை இராணுவத்தினரால் கடந்த புதன்கிழமை தொடக்கம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீதிகளினால் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் அவ்வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பொதுமக்களும் வழிமறிக்கப்பட்டு கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக மேலும் கூறப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் ஏலவே மன்னார் பிரதான பாலம், மன்னார், மதவாச்சி பிரதான வீதியில் உள்ள வங்காலை முற்சந்தி, மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் மாதா கிராமம் சந்தி மற்றும் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள தாராபுரம் சந்தி ஆகியவற்றில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள வீதிச் சோதனைச் சாவடிகளில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மன்னார் நகரின் பல முக்கிய வீதிகளில் கடந்த புதன்கிழமை தொடக்கம் இலங்கை இராணுவத்தினர் திடீர் சோதனைச் சாவடிகளை அமைத்து பொதுமக்களை சோதனை செய்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.