வடமாகாணம் மன்னார்

பிரதேச சபைத் தவிசாளர் பதவி நீக்கம்- ஆளுநர் உட்பட ஏழுபேருக்கு நீதிமன்றம் கட்டளை

27 ஆம் திகதி முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு உத்தரவு
பதிப்பு: 2021 ஒக். 03 20:12
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 03 21:51
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வட மாகாண ஆளுநரினால் பதவி நீக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் (Writ of Mandamus) பிரதிவாதிகளாகக் குறிப்பிடப் பட்டுள்ள வட மாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் உட்பட எழுவரை எதிர்வரும் 27ஆம் திகதியன்று மேல் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சாகுல் ஹமீட் முகம்மது முஜாஹீரின் ஒழுங்கீனங்கள் மற்றும் தகுதியின்மை காரணமாக, அது குறித்து வட மாகாண ஆளுநருக்கு சமர்பிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி வட மாகாண ஆளுநரினால் அவரின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
 
அத்துடன் முன்னாள் தவிசாளர், பிரதேச சபையின் உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கும் தகுதியற்றவர் எனும் அடிப்படையில் அவரின் பிரதேச சபை உறுப்புரிமையும் வட மாகாண ஆளுநரினால் நீக்கம் செய்யப்பட்டது. மேலும் வட மாகாண ஆளுநரினால் மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளரின், தவிசாளர் பதவி மற்றும் பிரதேச சபை உறுப்புரிமை நீக்கம் ஆகியவை தொடர்பான வட மாகாண ஆளுநரின் விஷேட வர்த்தமானி அறிவிப்பும் கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி வெளிவந்திருந்தது.

இந்த நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சாகுல் ஹமீட் முகம்மது முஜாஹீர் வட மாகாண ஆளுநரின் உத்தரவிற்கு எதிராக கடந்த மாதம் 28ஆம் திகதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் கட்டளை நீதிப் பேரணை எனும் ரிட் மனு (Writ of Mandamus) ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரரான மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சாகுல் ஹமீட் முகம்மது முஜாஹீர், தனது மனுவில் வட மாகாண ஆளுநர் திருமதி பியன்சியா சறோஜினிதேவி மன்மதராசா சார்ள்ஸ் மற்றும் சட்டா மா அதிபர், ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கந்தையா அரியநாயகம், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மன்னார் மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர், மன்னார் பிரதேச சபை செயலாளர் மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் என ஏழு தரப்பினர்களைப் பிரதிவாதிக ளாகக் குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் தவிசாளர், தனது தவிசாளர் பதவி மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவி ஆகியன வட மாகாண ஆளுநரினால் நீக்கம் செய்யப்பட்டமை சட்டவிரோதமானதெனவும், இயற்கை நீதிக்கு புறம்பானதெனவும் தெரிவித்து வட மாகாண ஆளுநரின் உத்தரவிற்கும், அவரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கும் தடை விதித்து கட்டளை பிறப்பிக்கவேண்டும் எனவும், தான் மன்னார் பிரதேச சபையின் தலைவராகத் தொடர்ந்து பணியாற்ற வட மாகாண ஆளுநருக்கு கட்டளை பேராணையைப் பிறப்பிக்க வேண்டும் எனும் கோரிக்கைகளையும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த றிட் மனுவை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த மனு தொடர்பான விசாரணைகளை கடந்த 29ஆம் திகதி மேற்கொண்டது. இதன்போது மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

குறித்த மனு தொடர்பான விசாரணைகளை அக்டோபர் மாதம் 27ஆம் திகதி நடத்துவதற்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. மேற்படி வழக்கு விசாரணைத் தினமான எதிர்வரும் 27ஆம் திகதியன்று மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள வட மாகாண ஆளுநர் உட்பட ஏழு எதிர்மனுதாரர்களையும் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.