வடமாகாணம்

மன்னாரில் கைதான இளம் முஸ்லிம் குடும்பஸ்தர் மரணம்

அடித்துக் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் பொலிஸார் மீது சந்தேகம்
பதிப்பு: 2021 ஒக். 04 22:39
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 04 23:20
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளம் முஸ்லிம் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரினால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளதினால் இறந்தவரின் குடும்பத்தினர் குறித்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் பொலிஸாரே பிரஸ்தாப நபரை அடித்து கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து இறந்தவரின் குடும்பத்தினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
 
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

மன்னார் எருக்கலம்பிட்டி தர்கா நகரில் வசிக்கும் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தினரான முகம்மது றம்சான் கடந்த முதலாம் திகதி வெள்ளி இரவு எருக்கலம்பிட்டியில் இருந்து புதுக்குடியிருப்பிற்கு முச்சக்கரவண்டியொன்றில் சென்றுள்ளார். பின்னர் இவர் இரவு 10.30 மணியளவில் மீண்டும் எருக்கலம்பிட்டியில் உள்ள தனது வீட்டிற்கு குறித்த முச்சக்கர வண்டியில் திரும்பியவேளை இரவு நேர ரோந்துக் கடமையில் ஈடுபட்ட மன்னார் பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டியை வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.

இதன்போது குறித்த இளம் குடும்பஸ்தரான முகம்மது றம்சான் வசம் கஞ்சா போதைவஸ்து இருந்ததாகவும், இந்தநிலையில் பொலிஸார் அவரையும் அவர் பயணித்த முச்சக்கர வண்டிச் சாரதியையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைதான குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வெள்ளி இரவு 11.30 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தாகவும் கூறப்படுகிறது. மேலும் மறுநாள் சனிக்கிழமை காலை குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்வதற்கு முற்பட்டவேளை முகம்மது றம்சான் எனும் இளம் குடும்பஸ்தர் திடீர் சுகயீனத்திற்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுகயீனம் காரணமாக அதிக அவஸ்தைக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் பொலிஸாரினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாவையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் மரணமடைந்துள்ள முகம்மது றம்சான் கடந்த வெள்ளி இரவு கைதாகிய சமயம், கைது செய்யப்பட்ட இடத்தில் வைத்து பொலிஸாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும்,

அவர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் பொலிஸாரின் கடுமையான தாக்குதலுக்கும் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளதாகவும், முகம்மது றம்சானின் தாயாரும், அவரின் சகோதரர்களும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை மரணமடைந்த முகம்மது றம்சான் கடந்த வெள்ளி இரவு மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கஞ்சா மற்றும் ஐஸ் எனும் போதைவஸ்தினை எடுத்து வரும் நிலையில் பொலிஸாரைக் கண்டு குறித்த போதைப் பொருட்களை விழுங்கியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் விழுங்கிய போதைப் பொருட்களின் வீரியம் காரணமாக உடலில் ஏற்பட்ட உபாதை மற்றும் சுகயீனம் காரணமாக குறித்த முகம்மது றம்சான் மரணமடைந்ததாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரணமடைந்த முகம்மது றம்சானின் உடல் மன்னார் பொது வைத்தியசாலையில் சடலப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இன்று திங்கள் மாலை 6.30 மணியளவில் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.