வடமாகாணம் மன்னார்

கோயில்மோட்டை காணி விவகாரம்- கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியின் செயலாளரிடம் மகஜர்
பதிப்பு: 2021 ஒக். 06 21:24
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 06 21:32
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச த்தில் உள்ள அரச காணியான கோயில்மோட்டை எனும் விவசாயக் காணியை மடு மாதா ஆலய நிருவாகத்தினர் தற்போது உரிமை கோரி வருவதாகவும், எனினும் அதனை நீண்ட காலமாக நெற்செய்கை மேற்கொண்ட தமக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து மடுப் பகுதியைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள் நேற்று செவ்வாய் மாலை கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
நேற்று கொழும்பு மாநகரில் பெய்த கடும் அடை மழைக்கு மத்தியில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தை மேற்கொண்ட மன்னார் மடுப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தை சேர்ந்த சுமார் 27ற்கும் அதிகமான தமிழ் விவசாயிகள் பல்வேறு வாசகங்களைக்கொண்ட பதாதைகளை ஏந்தியாவாறு குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் மடுப்பகுதியில் உள்ள அரச காணியான குறித்த கோயில்மோட்டை காணியில் தாம் நாற்பது வருடங்களுக்கு மேலாக நெற்செய்கையில் ஈடுபட்டதாகவும் இந்த நிலையில் குறித்த காணி ஆலய நிருவாகத்திற்கு சொந்தமானதெனக் கூறி மடு மாதா ஆலய நிருவாகத்தினர் தம்மிடம் குத்தகை அறவிட்டதாகவும், எனினும் ஏழை விவசாயிகளான தாம் இதுபற்றி உண்மை நிலை அறியாது ஆலய நிருவாகத்தினரின் கோரிக்கைய ஏற்று வருடாந்தம் குத்தகை செலுத்தியதாகவும் நேற்று கொழும்பு நகரில் ஆர்பாட்டத்தை மேற்கொண்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இக்காணி தொடர்பான உண்மை நிலையைத் தற்போது தாம் அறிந்து கொண்டதாகவும், இந்த நிலையில் நீண்ட காலமாக இக்காணிப் பகுதியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்ட தமக்கு இக்காணியை முறைப்படி வழங்க வேண்டும் என தாம் தொடர்சியாகக் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அண்மையில் மடுப்பகுதிக்கு வருகை தந்த வட மாகாண காணி ஆணையாளர், மேற்படி கோயில்மோட்டை காணியை அதில் விவசாயம் மேற்கொண்டு வரும் தமக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாகக் கொழும்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மடுப் பகுதி விவசாயிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வட மாகாண காணி நிருவாகத் திணைக்களத்தினால் கோயில்மோட்டை பகுதியில் எமக்கு காணி வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு மடு ஆலய பங்குத்தந்தை உட்பட ஆலய நிருவாகத்தினர் பல இடையூறுகளை ஏற்படுத்துவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கோயில்மோட்டை விவசாய காணி தொடர்பில் வட மாகாண சபை நிருவாகம் சட்டரீதியாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விரைவில் அமுல்படுத்துவதற்கு மத்திய அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என்பதனை வலியுருத்தும் வகையிலே கோயில்மோட்டை பகுதியில் விவசாயம் மேற்கொள்ளும் தாம் அனைவரும் மன்னார் மடுப்பகுதியில் இருந்து கொழும்பு நகருக்கு வந்து குறித்த ஆர்பாட்டத்தை மேற்கொண்டதாகத் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மன்னார் மடுப் பகுதியைச் சேர்ந்த மேற்படி தமிழ் விவசாயிகளுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலந்துறையாடியதாகவும், இதன் போது ஜனாதிபதியின் செயலாளரிடம் விவசாயிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன.