வடமாகாணம்

மன்னாரில் சரணடைய வந்த ஐவர் விபத்தில் காயம்

பொலிஸ் நிலையம் முன்பாகச் சம்பவம்- விசாரணை தொடர்கின்றன
பதிப்பு: 2021 ஒக். 09 22:40
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 09 22:47
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
கோஷ்டி மோதல் தொடர்பாக மன்னார் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் சரணடையச் சென்ற ஐவர் இன்று 9ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30க்கு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் எழுத்தூர் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள தோட்டக்காடு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை தனியாருக்குச் சொந்தமான காணியொன்றைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், மற்றுமொரு சாராருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு பெரும் மோதலாக உருவெடுத்தது.
 
குறித்த மோதல் சம்பவம் தொடர்பாகப் மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்காக, அவர்களைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில் பொலிஸாரல் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஐவர் இன்று காலை 10.30க்கு மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடையச் சென்ற சமயம் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள வீதி வழியாக மிக வேகமாக வருகை தந்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர்.

மேலும் குறித்த விபத்தையடுத்து டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி தலைமறைவாகியதாகவும் பின்னர் மன்னார் உயிலங்குளம் பகுதியில் வைத்து மன்னார் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மன்னார் பணங்கட்டுக்கொட்டுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த விபத்து முற்றிலும் திட்டமிடப்பட்ட விபத்து எனவும் எழுத்தூர் தோட்டக்காட்டில் உள்ள பிரஸ்தாபக் காணியின் உரிமையாளரினாலேயே மேற்படி விபத்து திட்டமிடப்பட்டதாகவும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் மன்னார் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். மேலும் எழுத்தூர் தோட்டக்காட்டுப் பகுதியில் உள்ள காணியின் உரிமையாளர் மன்னார் உயிலங்குளத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் தனது காணியை துப்பரவு செய்தவேளை அங்கு மோதலில் ஈடுபட்ட எதிர் தரப்பினரை குறி வைத்தே மேற்படி விபத்தை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து ஒரு கொலை முயற்சி எனவும் இது தொடர்பாக உரிய நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என காயமடைந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.