கிழக்கு மாகாணம் அம்பாறையைச் சேர்ந்த

தமிழ் அரசியல் கைதி 12 ஆண்டுகளின் பின்னர் நிரபராதியெனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை

மொனராகலை நீதிமன்றம் உத்தரவு
பதிப்பு: 2021 ஒக். 10 21:26
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 10 21:41
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கை இராணுவத்தினரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுச் சுமார் 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அம்பாறை அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த 29 வயதான கதிரவேலு கபிலன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
கொழும்பு-புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் பீ.சி.ஆர் பரிசோதனைகளை அடுத்து இன்று சண்பகல் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு உறவுகளுடன் இணைந்துள்ளதாக, உறவினர்கள் கூறியுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 20.05.2009 இற்குப் பின் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாகச் சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சுமார் ஒன்றரை வருட காலம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15.02.2011 அன்று மொனராகலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்கள் எதுவும் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், சிரேஸ்ட சட்டத்தரணி பஞ்சாட்சரம் நீதிமன்றில் தர்க்க நியாயங்களை சுட்டிக்காட்டி கபிலனின் விடுதலையை உறுதி செய்யுமாறு மன்றில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த தமிழ் அரசியல் கைதிக்கெதிராக குற்றத்தை ஒப்புவிக்கப் போதிய சாட்சியாதாரங்கள் காணப்படாத காரணத்தைக்கூறி அவரை நிரபராதி என விடுதலை செய்துள்ளது.