வடமாகாணத்தில்

உரத்துக்குத் தட்டுப்பாடு- விவசாயிகள் கவலை

ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் பெரும் நெருக்கடி ஏற்படுமெனவும் கூறுகின்றனர்
பதிப்பு: 2021 ஒக். 10 21:46
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 15 14:28
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இவ்வருட காலபோக நெற்செய்கைக்கான விதைப்பு வேலைகளை ஆரம்பித்துள்ள நிலையில் வடக்கின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தமது விவசாய நிலங்களில் காலபோகத்திற்கான உழவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வருட பெரும்போக நெற்செய்கைகளில் ஈடுபடும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், இலங்கையில் தற்போது நிலவும் பாரிய உரத் தட்டுப்பாடுகளுக்கு விரைவில் முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என வட மாகாண விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
 
தற்போது இலங்கை முழுதும் தலைத்தூக்கியுள்ள உரத்தட்டுப்பாட்டின் பாதிப்பை இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வட மாகாணத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என மேற்படி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

வட மாகாணத்தில் தற்போது உரத் தட்டுப்பாட்டுடன் கிருமிநாசினிகள், பீடைநாசினிகள் மற்றும் களை நாசினிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதுடன், வடக்கின் சில முக்கிய நகரங்களில் அவற்றின் விலைகளும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இலங்கை அரசு, உர இறக்குமதிக்கு தடை விதித்தமையினால் வடக்கின் விவசாயிகள் தமது நெற்செய்கைகளைப் பாதுகாப்பதற்கு உரங்களை தேடி வீதிகளில் அலையும் காட்சிகளையும் விரைவில் அவதானிக்கலாம் என விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களிடம் நாட்டின் விவசாய துறையில் நிலவிவரும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை என்பதை உணர்ந்து வரும் இலங்கை விவசாயிகள் அரசாங்கத்தினை நம்பாது தமது விவசாய செய்கையில் பராம்பரிய முறைகளை புகுத்தி இயற்கையான சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர் என விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையின் தமிழர் பகுதியான வட மாகாண தமிழ் விவசாயிகளும் சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் தாம் மேற்கொண்ட இயற்கை முறையான விவசாய செய்கைகளுக்கு முற்றிலும் மாறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வட மாகாண விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வட மாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த விவசாயிகள், இவ்வருட காலபோக மானவாரி நெற்செய்கைக்கான ஆரம்ப கட்டப் பணிகளைப் பூர்த்தி செய்து விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக முழங்காவில் விநாயகர் விவசாயக் கூட்டுறவு அமைப்பின் பொது முகாமையாளர் முருகேசுப்பிள்ளை முரளிதரன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

தற்போது பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் முழங்காவில் பகுதியில் மட்டும் சுமார் 2000 ஏக்கர் விஸ்தீரணத்தில் நெற்செய்கைகள் மேற்கொள்வதற்கான விதைப்பு நடவடிக்கைகளை இப்பகுதி விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர் என பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

குறித்த 2000 ஏக்கர் விஸ்தீரணத்தில் தற்போது சுமார் 60 வீதமான நெற்காணிகளில் உழவுப் பணிகள் பூர்த்தியாகி நெற்செய்கைக்கான விதைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு ள்ளதாக முழங்காவில் விநாயகர் விவசாயக் கூட்டுறவு அமைப்பின் பொது முகாமையாளர் முருகேசுப்பிள்ளை முரளிதரன் கூர்மைச் செய்திக்கு குறிப்பிட்டார்.

இதேவேளை வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயிகள் தமது விவசாய செய்கைக்குத் தேவையான இரசாயன உரங்களைப் பெற்று கொள்ள முடியாத நிலையில் வட மாகாணத்தில் என்றும் இல்லாத அளவில் இயற்கை உரங்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இயற்கை உரமான மாட்டெருவின் விலையும் வடக்கின் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் வட மாகாணத்தில் கால்நடை வளர்போர் ஒரு டிரக்டர் லோட் மாட்டெருவை 5000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்த நிலையில் தற்போது ஒரு டிரக்டர் லோட் மாட்டெரு 12 ஆயிரம் ரூபாவரை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த விலைக்கும் தேவையான அளவு மாட்டெருக்களை பெறுவது கடினமாகவுள்ளதாகவும் வட மாகாண விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.