வடமாகாணம்

மன்னாரில் 31 ஆயிரத்து 339 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை

அரச அதிபர் தலைமையில் கூட்டம்
பதிப்பு: 2021 ஒக். 16 20:50
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 18 21:49
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பெரும்போக நெற்செய்கை சுமார் 31 ஆயிரத்து 339 ஏக்கர் விஸ்தீரணத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போக நெற்செய்கை தொடர்பான விஷேட கூட்டம் கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரன்லி டி மெல் தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தின் போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
மன்னார் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக சிறிய குளங்கள் பல நிரம்பிக் காணப்படுகிறது. அத்துடன் மாவட்டத்தில் மிகப் பெரிய விவசாயக் குளமான முருங்கன் கட்டுக்கரைகுளத்தில் 7 அடி 8 அங்குலம் உயரத்திற்கு நீர்மட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் பெரும்போக நெற்ச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்குத் தேவையான முதல் நீர் விநியோகத்தை முருங்கன் கட்டுக்கரைக்குளத்தில் இருந்து இம் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு மேற்படி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை கட்டுக்கரைக்குளத்தில் இருந்து நீர்ப்பாசனத்தை மேற்கொள்வதற்கும் மேற்படி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இம் முறை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பெரும்போக நெற் செய்கையின் போது மாவட்டத்தில் உள்ள கால்நடைகளைப் பராமரிப்பது தொடர்பில் குறித்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதன் போது மாவட்டத்தில் பெரும்போக அறுவடை முடியும் வரை கால்நடைகளை வளர்ப்போர் தமது கால்நடைகளை முருங்கன் புல்லறுத்தான் கண்டல் மற்றும் மாந்தை மேற்கு பகுதியில் உள்ள தெருவெளி, தேத்தாவாடி ஆகிய பகுதிகளுக்கு எடுத்துச் சென்று அங்கு பட்டி அமைத்து பராமரிக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போக நெற்செய்கையில் விவசாயிகள் அனைவரும் இயற்கைப் பசளைகளைப் பயன்படுத்தல் வேண்டும், எனும் தீர்மானத்தை அதிகாரிகள் குறித்த கூட்டத்தில் முன்வைத்த நிலையில், இது, ஒரு சவாலான விடயம் என தெரிவித்த விவசாயிகள், தற்போது நாட்டில் நிலவும் உரத்தட்டுப்பாடு காரணமாக சுமார் 60 வருடங்களுக்கு பிறகு தாம் இயற்கை பசளைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

தமக்கு சிறிய அளவிலாவது யூரியா உரத்தைப் பெற்றுத் தருமாறும் அவர்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர். இதன் போது நாட்டின் ஏனைய மாவட்டங்களில் உரம் விநியோகம் நடைபெறும் பட்சத்தில் மன்னார் மாவட்டத்திற்கும் அதைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும் விவசாயிகள் உரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு வங்கிகளில் கடன் பெறுதல் தொடர்பாகவும் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

மன்னார், முசலி, மாந்தை மேற்கு, நானாட்டான், மடு ஆகிய பகுதிகளுக்கான பிரதேச செயலாளர்கள் கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மேற்படி விஷேட கூட்டத்தில் கலந்து கொண்டனர்.