வடமாகாணம் மன்னார்

மடு கோயில்மோட்டை காணி விவகாரம்- தெரடர்ந்தும் ஆர்ப்பாட்டம்

மகஜரும் கையளிப்பு
பதிப்பு: 2021 ஒக். 18 09:55
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 21 14:20
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள கோயில்மோட்டை எனப்படும் அரச காணி, சிலரினால் அபகரிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி அதனைக் கண்டிக்கும் வகையில் பெரியபண்டிவிரிச்சான் மற்றும் சின்னப்பண்டிவிரிச்சான் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று 18ஆம் திகதி புதன்கிழமை காலை மன்னார் நகரில் மேற்கொண்டனர்.
 
மன்னார் பஸார் பகுதியில் பழைய பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட பண்டிவிரிச்சான் கிராம மக்கள் மன்னார் மாவட்டச் செயலகம் சென்று அங்கு வட மாகாண ஆளுநருக்கான மகஜர் ஒன்றினையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரன்லி டி மெல்லிடம் கையளித்தனர்.

கோயில்மோட்டை காணி தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு பல கருத்துகளையும் தெரிவித்தனர். பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள கோயில் மோட்டை காணி நீண்ட காலமாக மடு மாதா ஆலய நிர்வாகத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

ஒரு சிலரின் தூண்டுதல் காரணமாக தற்போது குறித்த காணியை சிலர் அபகரிக்க முற்படுகின்றனர். மேலும் மடுப் பகுதியில் கிறிஸ்தவ மக்களும் இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் குறித்த காணியை மையப்படுத்தி சில தீய சக்திகள் மதங்களுக்கு இடையில் பிணக்குகளை ஏற்படுத்த முற்படுகின்றனர் என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பண்டிவிரிச்சான் கிராம மக்கள் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டத்தில் மடுப்பிரதேச செயலக பிரிவில் உள்ள பெரியபண்டிவிரிச்சான் மற்றும் சின்னப்பண்டிவிரிச்சான் ஆகிய இரண்டு கிராமங்களிலும் மிகவும் வறிய விவசாய குடும்பத்தினர் வாழ்ந்து வரும் நிலையில் குறிப்பிட்ட ஒரு தொகையினர் மட்டும் தாங்கள் ஏழை விவசாயிகள் எனக் குறிப்பிட்டு கோயில்மோட்டைக் காணியை அபகரிக்க முற்படுவதாகவும், இதற்கு இப்பகுதியில் உள்ள ஒரு சில அரசியல் செல்வாக்கு உடையவர்களும் உடந்தையாக உள்ளதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த கிராமங்களில் ஏழை விவசாயிகள் பலர் இருக்கின்ற நிலையில் ஒரு குழுவினர் மட்டும் தாங்கள் ஏழை விவசாயிகள் எனக் கூறிக்கொண்டு குறித்த காணியை அபகரிக்க முயற்சி செய்து வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக தாம் வட மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு மகஜர் ஒன்றை மன்னார் அரச அதிபர் ஊடாக அனுப்பியுள்ளதாகவும், வட மாகாண ஆளுநர் இக்காணி தொடர்பாக உரிய தீர்வை விரைவில் பெற்று தருவார் என தாம் நம்புவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மடு பெரியபண்டிவிரிச்சான் மற்றும் சின்னபண்டிவிரிச்சான் கிராம மக்கள் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தனர்.