வடமாகாணம்

மன்னாரில் போதைவஸ்த்துப் பாவனை அதிகரிப்பு

18 வயது இளைஞன் கைது
பதிப்பு: 2021 ஒக். 25 20:52
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 27 01:55
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் தாழ்வுபாடு கிராமத்தில், கஞ்சா போதைவஸ்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞரொருவரை கடந்த சனிக்கிழமை மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட சுமார் 10 கிலோ நிறையுடைய கஞ்சா பொதிகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் நிலையத்தின் விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தாழ்வுபாட்டு கிராமத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அங்கு வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
 
அத்துடன் மேற்படி வீட்டில் இருந்த 18 வயதுடைய இளைஞரொருவரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் கைதான இளைஞரை மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை மன்னார் பேசாலை 8 ஆம் வட்டார பகுதியில், பொலிஸாரினால் கடந்த திங்கள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பொழுது அங்குள்ள வீடொன்றில் இருந்து சுமார் 20 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சாப் பொதிகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பின் பேரில் பேசாலை எட்டாம் வட்டாரத்தில் உள்ள மேற்படி வீட்டில் இருந்து குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரான பேசாலை எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கடந்த திங்கள் அன்று கைது செய்துள்ளனர். மேலும் கைதான குறித்த பெண், விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேசமயம் மன்னார்- மதவாச்சி பிரதான வீதியில் உள்ள குஞ்சுக்குளம் சோதனை சாவடி ஊடாக கடந்த புதன் இரவு செட்டிக்குளம் நோக்கி பயணித்த இலகு ரக லொறி ஒன்றில் இருந்து சுமார் நான்கு கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளை மடு பொலிஸார் மீட்டுள்ளனர்.

மன்னாரில் இருந்து வவுனியா செட்டிக்குளம் பகுதிக்கு குறித்த லொறியில் கஞ்சா கடத்தப்பட்டவேளையே, பொலிஸார் குறித்த கஞ்சாவினை மீட்டுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மேற்படி லொறியில் பயணித்த வவுனியா செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.