வடமாகாணம்

மன்னாருக்குப் பயணம் செய்த அதானி குடும்பம்

இலங்கையில் முதலீடு செய்வது குறித்து ஆராய்வு
பதிப்பு: 2021 ஒக். 26 20:09
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 27 01:54
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திற்கு இந்தியாவின் கோடிஸ்வர வர்த்தகர்களான அதானி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் நேற்று 25ஆம் திகதி திங்கள் மாலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர். இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மன்னார் வருகை தந்த மேற்படி வர்த்தகர்களுடன் விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க டி.வி.சானக்க மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹத்தாலா ஆகியோர் வருகை தந்தனர்.
 
இந்தியா பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான உலக கோடிஸ்வரர்களில் ஒருவரான அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியும் அவர் குடும்பத்தினரும் இரண்டு தனியார் விமானங்களில் கடந்த ஞாயிறு இரவு இலங்கை வந்தடைந்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்திற்கான அபிவிருத்தி உடன்படிக்கையில் இந்தியாவின் அதானி குழுமத்தினர் கைச்சாத்திட்டு சுமார் ஒரு மாதம் கழிந்த நிலையில் மேற்படி அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியும் அவர் குடும்பத்தினரும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இம்மாதம் ஏழாம் திகதி வெளிவந்த பண்டோரா ஆவணங்களில் கோடிஸ்வரர்களாக குறிப்பிடப்பட்ட, அதானி குடும்பத்தினரின் இலங்கைக்கான திடீர் வருகை தென்னிலங்கையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே அதானி குடும்பத்தினர் நேற்று மாலை மன்னார் நகருக்கு வருகை தந்தனர். மேலும் மன்னார் நகருக்கு வருகை தந்த குறித்த அதானி குழுமத்தினர் பேசாலை நடுக்குடா பகுதிக்கு சென்று அங்கு அமைந்துள்ள இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினை பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவர்கள் மன்னார் மாவட்டத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வேறு சில பகுதிகளுக்கு சென்றதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்தியா கோடிஸ்வரர்களான அதானி குடும்பத்தினர் மன்னார் நகருக்கு மேற்கொண்ட திடீர் விஜயம் தொடர்பில் எவ்வித தகவல்களும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என மன்னார் மாவட்ட செயலக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் குறித்த விஜயம் தொடர்பில் எத்தரப்பிற்கும் எவ்வித தகவலும் வழங்காது இலங்கை அரசின் முதலீட்டுக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அரசாங்க உயர் மட்ட அதிகாரிகள் அதானி குடும்பத்தினருடன் மன்னார் நகருக்கு வந்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.