வடமாகாணம்

மன்னாரில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

காதர் மஸ்தான் வழங்கி வைத்தார்
பதிப்பு: 2021 ஒக். 28 18:49
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 29 20:16
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழர் தாயகப் பகுதியான வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கடந்த கால யுத்தத்தில், அசையா சொத்துகள் உடமைகள் மற்றும் உயிர் இழப்புகள் என கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான பொதுமக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு கடந்த 25ஆம் திகதி திங்கள் மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டீ மேல் தலைமையில் நடைபெற்ற மேற்படி நஷ்டஈட்டுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் இலங்கையின் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான காதர் மஸ்தான் கலந்துகொண்டு இழப்பீட்டுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
 
குறித்த காசோலை வழங்கும் நிகழ்வில் நஷ்டஈடு கோரி விண்ணப்பங்களை சமர்பித்தவர்களில், முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட 80 பேர்களுக்கு மட்டுமே மேற்படி நஷ்டஈடு கொடுப்பனவிற்கான காசோலைகள் வழங்கப்பட்டது.

குறித்த நஷ்டஈட்டுக் கொடுப்பனவில் விண்ணப்பதாரிகள் கோரிய நஷ்டஈட்டுக்கான முழுத்தொகையில் 25 சத வீதமான இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளே விண்ணப்பித்த பொது மக்களுக்கு வழங்கப்பட்டதாக மன்னார் மாவட்ட செயலக வட்டாரங்கள் கூர்மைச் செய்தி தளத்திற்குத் தகவல் தெரிவித்தன. அத்துடன் மிகுதிக் கொடுப்பனவுகள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் என கூர்மைச் செய்திக்கு மன்னார் செயலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

கடந்த திங்கள் மாலை நிகழ்ந்த குறித்த காசோலை வழங்கும் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு , முசலி, நானாட்டான் , மாந்தை மேற்கு மற்றும் மன்னார் நகரம் ஆகியவற்றிற்கான பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்ட திட்டப்பணிப்பாளர் மற்றும் உதவித் திட்டப்பணிப்பாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்

இதேவேளை மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 1983 ஆம் ஆண்டில் இருந்து கடந்த 2009 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பல இராணுவ நடவடிக்கைகள் மற்றும் வன்செயல்கள் உட்பட இறுதி யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

பாதிக்கப்பட்ட பொது மக்கள் தமக்கு ஏற்பட்ட இழப்பிற்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரி, இலங்கை அரசின் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் அமைச்சிற்கு தமது விண்ணப்பங்களையும் சமர்ப்பித்தனர். எனினும், இலங்கை அரசாங்கம் கடுமையான யுத்தப் பாதிப்பிற்கு உள்ளான தமக்கு இதுவரை உரிய நஷ்டஈட்டுக் கொடுப்பனவினை வழங்கவில்லை என யுத்தப் பாதிப்பிற்கு உள்ளான தமிழ் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்ட தமிழ் மக்கள் உட்பட வட கிழக்கு தமிழர் தாயகத்தின் ஏனைய பகுதி மக்களுக்கும் அவர்களின் யுத்தப் பாதிப்பிற்கான நஷ்டஈடு வழங்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் போதிய அளவு கரிசனை காட்டாத நிலையில் சில அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்கத்தில் உள்ள தமது செல்வாக்கைப் பிரயோகித்து தமது கட்சி அரசியலை முன்னெடுக்கும் வகையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமது ஆதரவாளர்களுக்கு மட்டும் நஷ்டஈட்டு கொடுப்பனவினை பெற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையிலேயே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானும், அவரினால் தெரிந்தெடுக்கப்பட்ட தனது கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டும் நஷ்டஈட்டு கொடுப்பனவினை கடந்த திங்கள் மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கியதாகத் யுத்தத்தினால் பாதிப்படைந்த தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.