வடமாகாணம்

மன்னாரில் ஐந்து நாட்கள் மழை

பல கிராமங்கள் நீரில் மூழ்கின
பதிப்பு: 2021 நவ. 04 18:52
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 06 12:38
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பொது மக்களின் வீடுகளிலும் மழை நீர் உட்புகுந்துள்ளதினால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மூர் வீதி, உப்புக்குளம், பள்ளிமுனை, சௌத்பார், பணங்கட்டுக்கொட்டு, எமில்நகர் மற்றும் தலைமன்னார் கிராமம், தலைமன்னார் பியர் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதினால் பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் இயல்பு வாழக்கையும், முற்றாக சீர்குழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மன்னாரில் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மேற்படி கிராமங்களில் வதியும் பொதுமக்கள் மழை வெள்ளம் காரணமாக தமது வீடுகளில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் மழை காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் பொதுமக்களை அருகில் உள்ள பாடசாலைகள், பொதுக்கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மன்னார் நகர சபை எல்லைக்குள் உள்ள மூர் வீதி உப்புக்குளம், சௌத்பார், எமில்நகர் மற்றும் பணங்கட்டுக்கொட்டு பகுதிகளில் சீரான வடிகால் அமைப்புகள் இல்லாததினால் மழை நீர் கடலுக்குள் செல்லமுடியாது இப்பகுதிகள் பெரும் வெள்ளக்காடாக மாறியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மன்னார் நகரில் பல பகுதிகளில் எவ்விதத் திட்டமிடலும் இல்லாது வகை தொகையின்றி கட்டிட நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதினால் நகரின் மழை நீர் வடிந்தோடும் பகுதிகள் ஊடாக நீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது பெய்துவரும் அடைமழை காரணமாக நானாட்டான், மாந்தை மேற்கு மற்றும் முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சில கிராமங்களிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக தலைமன்னார் கிராமத்தில் உள்ள பல வீடுகளில் நீர் உட்புகுந்து அப்பகுதி மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச அதிகாரிகள் இப்பகுதிக்கு வருகை தந்து இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தலைமன்னார் கிராமத்தின் பங்குத் தந்தை வண.பிதா மார்க்கஸ் அடிகளார், புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பகுதி மக்கள் மழை வெள்ளம் காரணமாக தமது வீடுகளில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் அரசாங்க அதிகாரிகள் பொது மக்களை வந்து இதுவரை பார்வையிடாதுள்ளமை கண்டிக்கத்தக்கது என தலைமன்னார் பங்குத் தந்தை ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.