வடமாகாணம்

மன்னாரில் கடும் மழை- 13 கிராமசேவகர் பிரிவுகள் நீரில் மூழ்கின

செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்
பதிப்பு: 2021 நவ. 07 19:36
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 12 01:37
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் ஞாயிறு அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல்தீவு பகுதியின் மூன்று கிராமசேவையாளர் பிரிவுகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இப்பகுதிகளில் உள்ள பல வீடுகளில் கடல் நீரும் உட்புகுந்துள்ளது. ஞாயிறு அதிகாலையில் பெய்த திடீர் மழை காரணமாக வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததினால் வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்று அதிகாலை பெய்த அடைமழை காரணமாக விடத்தல்தீவு மீனவர்கள் சிலரின் மீன்பிடிப்படகுகளும், மீன்பிடி வலைகளும் பாதிப்படைந்துள்ளது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று விடத்தல்தீவு கிராமத்திற்கு விஜயம் செய்து அங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். மேலும் அப்பகுதி கிராமசேவையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளை அவர் சந்தித்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாகப், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் பார்வையிட்டார். நாட்டில் நிலவிய காலநிலைக் கோளாறு காரணமாக மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் முழுதும் தொடர்ச்சியாகப் பெய்த அடைமழை காரணமாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் கிராமம், மூர் வீதி, பள்ளிமுனை, எமில் நகர், பணங்கட்டுக்கொட்டு மற்றும் சௌத்பார் பகுதிகளின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் இப்பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்குள் மழை நீர் உட்புகுந்ததினால் சுமார் 50ற்கும் அதிக குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்வையிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை கடலுக்கு பாய்ச்சும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அநர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் மன்னார் பிரதேச செயலாளருக்கும் அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் மன்னார் தலைமன்னார் கிராமத்தில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் கடந்த சனிக்கிழமை தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் இன்று ஞாயிறு இரண்டாவது நாளாக மேற்கொள்ளபடும் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை அப்பகுதி கிராமசேவையாளர்கள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.