மல்வத்த ஓயா ஆறு (அருவி ஆறு) பெருக்கெடுத்துள்ளதால்

மன்னாரில் பல கிராமங்களுக்கு எச்சரிக்கை

அரச அதிபர் விளக்கம்
பதிப்பு: 2021 நவ. 10 21:02
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 12 01:39
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் வட மத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மல்வத்த ஓயா ஆறு (அருவி ஆறு ) பெருக்கெடுத் துள்ளதால் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு நானாட்டான் மற்றும் முசலி ஆகிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்கச் செய்யும் வகையில் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் இப்பகுதி மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (RED ALERT) எனும் அபாய அறிவிப்பை விடுத்துள்ளார்.
 
இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய ஆறான மல்வத்து ஓயா ஆறு அனுராதபுரம் மாவட்டத்தில் உருவாகி மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள முத்தரிப்புத்துறை பகுதிக் கடலில் சங்கமமாகிறது.

தற்பொழுது இலங்கை தீவு முழுதும் ஏற்பட்டுள்ள காலநிலைக் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது. இவ்வாறான நிலையில் இலங்கையின் வட மத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கடுமையான தொடர் மழை காரணமாக மல்வத்து ஓயா ஆறு நிரம்பி வழிகின்றது. மேலும் நிரம்பி வழியும் குறித்த ஆற்றின் வான் கதவுகள் பல தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் மேற்படி மல்வத்து ஓயா ஆறு பெரும் பிரவாகத்துடன் பெருக்கெடுத்துள்ளதினால், அது முத்தரிப்புத்துறைக் கடலில் கலக்கும் வரை ஊடறுத்துச் செல்லும் மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் அமைந்துள்ள பல கிராமங்களில் வதியும் மக்களுக்கே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் அபாய அறிவிப்பை (RED ALERT) விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மடு நானாட்டான் மற்றும் முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தேக்கம், பூமலர்ந்தான், கட்டையடம்பன், பரிகாரிகண்டல், வேப்பங்குளம், மருதமடு, இராசமடு, வாழ்க்கைப்பற்றான் கண்டல் மடுக்கரை, வெள்ளாளர்கட்டு அச்சங்குளம் உட்பட பல கிராமங்களுக்கே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மல்வத்து ஓயா ஆற்றின் வெள்ளப் பெருக்கு குறித்து அபாய அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை மல்வத்து ஓயா ஆற்றின் அதீத பெருக்கெடுபால் அபாய நிலையை அடைந்துள்ள மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள தேக்கம் அணை மற்றும் குஞ்சுக்குளம் அணை ஆகிய பகுதிகளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இன்று புதன்கிழமை பிற்பகல் நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் சகிதம் பார்வையிட்டார். இச்சந்தர்ப்பத்தில் மல்வத்து ஓயா ஆற்றின் நீர் வரத்துப்பகுதியான தேக்கம் அணையின் நீர் மட்டம் 10 அடி 6 அங்குலத்திற்கு அதிகரித்துள்ளதை அரச அதிபர்கள் தலைமையிலான குழுவினர் அவதானித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் மடுப்பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள குஞ்சுக்குளம் நீர்தேக்கம், மல்வத்து ஓயா ஆற்றின் பெருக்கெடுப்பால் வான் பாய்கிறது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் பெரியமுறிப்பு மாதா கிராமம் ஆகிய மூன்று தமிழ் கிராமங்களுக்கு செல்லும் பிரதான பாதை முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இந்த நிலையினால் மேற்படி மூன்று கிராமங்களும் தரை வழி பாதை துண்டிக்கப்பட்டுள்ளதாகக் குஞ்சுக்குளம் தகவல்கள் தெரிவிக்கின்றன.