இலங்கைத்தீவில் இடம்பெற்ற

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான வழக்கு 22 ஆம் திகதி ஆரம்பம்

பூஜீத ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ முன்னிலையாவர்
பதிப்பு: 2021 நவ. 18 21:54
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 21 20:58
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கையில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜீத ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகிய இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
 
2019ஆம் ஆண்டு மைத்திரி ரணில் நல்லாட்சிக் காலத்தில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தொடர்பான விசாரணைகளை தனித் தனியாக மேற்கொள்வதற்கு சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதம நீதியரசரினால் மூன்று நீதிபதிகள் கொண்ட விஷேட ட்ரயல் அட் பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்றிலேயே மேற்படி இருவரின் வழக்குகள் நடைபெறவுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்குதல்களுக்கு முன்னதாகவே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த நிலையிலும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் குறித்த தாக்குதல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காததுடன், கடமையை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியுள்ளதாக குறிப்பிட்டு இவர்கள், இருவர் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள், இலங்கை சட்ட மா அதிபரினால் சுமத்தப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதிக்கும், ஏப்பிரல் மாதம் 21ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதியில் பயங்கரவாதி சஹ்ரான் மற்றும் அவரின் குழுவினரால் இலங்கையில் மதஸ்தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் வேறு பல இடங்களில், குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதற்கான தயார்படுத்தல்கள் அனைத்தையும் பயங்கரவாதிகள் பூர்த்திசெய்துள்ளனர் எனும் விபரம், தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக, அக்காலப் பகுதியில் பணியாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்த்தனாவிற்கு இரகசிய புலனாய்வுத் தகவல்களாகக் கிடைக்கப்பெற்றிருந்தது.

இந்தநிலையில் தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்த்தனா, குறித்த உளவுத் தகவல்களை, அச்சமயம் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய பூஜீத ஜெயசுந்தராவிற்கும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோவிற்கும் உரிய நேரத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய உளவுத் தகவல் குறித்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜீத ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகிய இருவரும் எவ்வித கரிசனையும் கொள்ளாது அலட்சியமாக நடந்துகொண்டுள்ளனர்.

இதன் மூலமாக இவ்விருவரும் 279 பேரின் மரணத்திற்கும், சுமார் 500 பேர்களுக்கு நேர்ந்த படுகாயங்களுக்கும் பொறுப்பு கூறல் வேண்டும், எனும் அடிப்படையில் இலங்கை தண்டனை சட்டக்கோவை 296 மற்றும் 300ஆம் அத்தியாயங்களின் கீழ் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் இலங்கை சட்ட மா அதிபரினால் இவர்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை குறித்த இருவரின் வழக்குகள் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இயங்கவுள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட விஷேட டிரயல் அட் பார் நீதிமன்றில் தொடர்சியாக விசாரிக்கப்படவுள்ளது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்களான முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜீத ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த அக்டோபர் மாதம் 02ஆம் திகதி நடைபெற்றவேளை, குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் எதிராகச் சுமத்தப்பட்டுள்ள 855 குற்றங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகைகள் எதிரிகளுக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.