வடமாகாணம்

மன்னாரில் மாவீரர் நினைவேந்தலைத் தடுக்கும் பொலிஸாரின் மனு நிராகரிப்பு

நீதிமன்றம் உத்தரவு
பதிப்பு: 2021 நவ. 22 07:57
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 23 03:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் 20 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மன்னார் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் ஆலயங்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகள், திருப்பலிகள் மற்றும் மத அனுஷ்டானங்கள் ஆகியவற்றை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என இலங்கை பொலிஸார் முன்வைத்த வினோதக் கோரிக்கையை மன்னார் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மன்னார், சிலாவத்துறை, முருங்கன், இலுப்பைக்கடவை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் கடந்த வெள்ளியன்று நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மேற்படி நூதனக் கோரிக்கையே, சட்டத்தரணிகளின் பலத்த ஆட்சேபணைகளை அடுத்து மன்னார் நீதிவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர்களின் நினைவேந்தல்களும், அஞ்சலி நிகழ்வுகளும் 20 ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் கோயில்களிலும் மத அனுஷ்டானங்களுடன் நிகழவுள்ளதாகவும், இந்த நிலையில் குறித்த நிகழ்வுகளுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என இலங்கை குற்றவியல் நடவடிக்கை கோவை பிரிவு 106ன் கீழ் மேற்படி பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மன்னார் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மன்னார் நீதிமன்றில் முன்வைத்த தமது விண்ணப்பத்தில், மன்னார் நகரில் உள்ள புனித செபஸ்தியார் பேராலயம் உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள சில முக்கிய மத ஸ்தலங்களில் பெயர்களை குறிப்பிட்டு அங்கு 20 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரை நடைபெறும் அனைத்து மத அனுஷ்டானங்களுக்கும் மன்னார் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் கோரிக்கைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த, சட்டத்தரணிகள், ஆலயங்கள் மற்றும் கோயில்கள் நடைபெறும் மத அனுஷ்டானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றில் தமது வாதங்களை முன்வைத்தனர். அத்துடன் மத அனுஷ்டானங்கள் இலங்கை அரசியல் அமைப்பில் காணப்படும் அடிப்படை மனித உரிமையாகும்.

பொதுமக்கள் இறந்த தமது உறவுகளின் நினைவேந்தல்களை மேற்கொள்வதற்கு அஞ்சலி செய்வதற்கும் உரிமையுண்டு. இந்த வகையில் தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மக்கள் தமது வழமையான மத நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவேண்டும் எனவும், தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்

இந்த நிலையில் சட்டத்தரணிகளின் வாதங்களை ஏற்றுக்கொண்ட மன்னார் நீதவான், மன்னாரில் உள்ள ஆலயங்கள் மற்றும் கோயில்களில் நடைபெறும் சாதாரண திருப்பலி பூஜைகள் மற்றும் ஏனைய வழிபாடுகளை பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளமுடியும் என கட்டளை பிறப்பித்தார்.

அத்துடன் ஆலயங்கள் மற்றும் கோயில்களில் நடைபெறும் மத வைபவங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் அல்லது கொடிகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்து மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வழமைபோன்று வழிபாடுகள் அனைத்தும் நடைபெற்றதாக மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் கூர்மைச் செய்தித்தளத்திற்கு தகவல் தெரிவித்தது. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் வழமைபோன்று பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.