வடமாகாணத்தின்

ஐந்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவும் கொவிட் நோய்

சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
பதிப்பு: 2021 டிச. 02 07:59
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 05 20:55
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழர் பகுதியான வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் கொவிட் - 19 நோய் தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில் பொது மக்கள் சுகாதார விதி முறைகளைப் பின்பற்றாது அலட்சியப்போக்குடன் செயல்படுவதாக வட மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயல்படுவதன் விளைவாக வட மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதம் 3 ஆயிரத்தி 49 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்திலேயே கடந்த நவம்பர் மாதம் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 842 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 825 பேர்களும் வவுனியா மாவட்டத்தில் 713 பேர்களும் மன்னார் மாவட்டத்தில் 540 பேர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 129 பேர்களும் கடந்த நவம்பர் மாதம் கொவிட் நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் வட மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் கொவிட் தொற்றினால் 49 பேர்கள் மரணித்துள்ளதாக வட மாகாண சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நேற்று புதன்கிழமை மன்னார் மாவட்டத்தில் 12 மாணவர்கள் உட்பட 15 பேர்கள் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்படி 13 மாணவர்களும் தலைமன்னார் பியர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் என மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் புதன் மாலை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 30ஆம் திகதி செவ்வாய்கிழமை இரண்டு கொவிட் தொற்றாளர்கள் மரணமடைந்ததுடன் நேற்று புதன்கிழமை முதலாம் திகதி மேலும் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணித்துள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார். மேலும் மன்னார் மாவட்டத்தில் நேற்று முதலாம் திகதி புதன் மாலைவரை 29 கொவிட் தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளதாக மன்னார் சுகாதாரப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்டத்தில் ஒமிக்ரோன் திரிபடைந்த வைரஸ் பரவும் ஆபத்து தொடர்பில் சுகாதார அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு காய்சல் அபாயம் தலைதூக்கியுள்ளதாகவும் கடந்த நவம்பர் மாதத்தில் 25 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் மேலும் தெரிவித்தார்