வடமாகாணம் கடற்பரப்பில்

அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராகக் கையெழுத்துப் போராட்டம்

மன்னாரில் ஆரம்பம் என்கிறார் மாவட்ட இணைப்பாளர் அந்தோணி
பதிப்பு: 2021 டிச. 03 20:24
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 05 20:49
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இந்திய மீனவர்களின் இழுவை படகுகள் இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி நுழைவதற்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்துகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். வட மாகாணம் கடற்றொழில் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் அனுசரணையில் திரட்டப்படும் மேற்படி கையெழுத்துகள் கொண்ட மகஜர்கள் இலங்கை ஜனாதிபதி, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் உட்பட அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
அத்துடன் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத வருகைக்கு எதிராக கையெழுத்துகள் சேகரிக்கும் பணிகள் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும். அத்துடன் எதிர்வரும் நான்காம் திகதி சர்வதேச மனித உரிமை தினத்தன்று இலங்கை கடல் பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அந்தோணி பெனடிட் குரூஸ் தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் நகரில் நேற்றுக் காலை ஆரம்பிக்கப்பட்ட இலங்கை கடலில் அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிரான கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு தமது கையெழுத்துகளை வழங்கியதாக அந்தோணி பெனடிட் குரூஸ் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் அன்டனி யேசுதாசன், மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச செயலாளர் என். எம். ஆலம் ஆகியோர் கலந்துகொண்டதாக மன்னார் மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.