இந்தியாவுக்குக் கடல் மூலம் சட்டவிரோதப் பயணம்

எயிட்ஸ் நோய் பரவும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கை

எச்.ஐ.வி விசேட வைத்திய அதிகாரி தகவல்
பதிப்பு: 2021 டிச. 04 19:58
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 05 20:52
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திற்கும் இந்தியா தமிழ் நாட்டு பகுதிக்கும் இடையில் சட்டவிரோதக் கடல் வழி மூலமாக அடிக்கடி இந்தியாவிற்கு பயணிப்பவர்களினால் எச்.ஐ.வி நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை 2ஆம் திகதி நடைபெற்ற விசேட விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்துகொண்டதன் பின் ஊடகங்களுக்கு தகவல் வழங்கியவேளையே அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
 
விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் மேலும் தெரிவித்ததாவது மன்னார் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் இருந்து சட்டவிரோதமாக படகுகள் மூலம் இந்தியாவிற்கு சென்று வருபவர்களினால் மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ. வி பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் போதை மருந்து பயன்படுத்துபவர் களினாலும் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மன்னார் மாவட்ட சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோதக் கடல் வழி பயணம் மூலமாகவும், போதைவஸ்து பாவனை மூலமாகவும் எச்.ஐ.வி தொற்று பரவுவது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுதல் வேண்டும். அத்துடன் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மன்னார் மாவட்ட பொது மக்கள் தமது பூரண ஆதரவை நல்குதல் வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு எச்.ஐ.வி நோய்த் தொற்றுடன் முதல் நபர் அடையாளம் காணப்பட்டார். அன்றைய நாளில் இருந்து இவ்வருடம் 2021ஆம் ஆண்டு வரை மன்னார் மாவட்டத்தில் 11 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2021 இவ்வருடத்தில் ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ரி. வினோதன் மற்றும் வைத்தியர்கள், சுகாதாரத் திணைக்கள உயர் அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.