இலங்கைத்தீவில்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- இளைஞன் கைது

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்
பதிப்பு: 2021 டிச. 05 22:02
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 06 02:27
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் கடந்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடந்த வியாழனன்று இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல ஹிங்குல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயது நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றது.
 
குறித்த மாவனெல்லை இளைஞர், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பயங்கரவாதி சஹ்ரான் ஹாசீமினால் மேற்கொள்ளப்பட்ட போதனை அமர்வுகளில் கலந்து கொண்டதாகவும், சஹ்ரான் ஹாசீமினால் அம்பாந்தோட்டை பகுதியில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில், குறித்த இளைஞர் பயிற்சிகள் பெற்றதாகவும் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே அவர் கைதானதாக இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குகளின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாசீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவை எதிர்வரும் 2022 ஜனவரி 10ஆம் திகதி மன்றில் ஆஜர் செய்யுமாறு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்சி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் தொடர்பில் சாரா ஜெஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவர் சட்டவிரோதமாக வெடிப் பொருட்களை தயாரித்தமை, அவற்றை தன்வசம் வைத்திருந்தமை தொடர்பில் அவற்றை அறிந்திருந்தும் அத்தகவலை பொலிஸாருக்கு வழங்காமை குறித்து பயங்கரவாதி சஹ்ரான் ஹாசீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவிற்கு எதிராக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை சட்ட மா அதிபர் கல்முனை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2ஆம் திகதி வியாழக்கிழமை கல்முனை மேல் நீதிமன்றில் நீதிபதி ஜெயராம் ட்ரொக்சி முன்னிலையில் சஹ்ரான் ஹாசீமின் மனைவிக்கு எதிரான குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுக்கப்பட்டது. எனினும் மேற்படி வழக்கின் எதிரியான சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா அன்றைய தினம் கல்முனை மேல் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. இந்த நிலையில் குறித்த பெண் கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி தெரிவித்தார். இத்தருணத்தில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி எதிரியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவை எதிர்வரும் 2022 ஜனவரி 10ஆம் திகதி மன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.