இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில்

ரணில் கேள்வி- பசில் திடீரென டில்லிக்குச் சென்றது ஏன்?

வௌிநாட்டு நிதியுதவிகள் குறித்த ஆவணத்தை சமர்ப்பிக்குமாறும் கோருகிறார்
பதிப்பு: 2021 டிச. 07 19:03
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 11 20:02
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்குச் சென்றமைக்கான காரணம் என்னவென்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை வரவு - செலவுத் திட்டக் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கேள்வி தொடுத்தார். வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, எந்தவொரு நிதி அமைச்சரும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதில்லை. ஆனால் இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார்.
 
ஆகவே அந்தத் திடீர் பயணத்துக்கான காரணத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

பொருளாதார மீட்சிக்கான அனைத்து நிதி விபரங்கள் மற்றும் திட்டங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் முன்வைக்கும் போது அதனைச் செவிமடுக்க வேண்டிய பொறுப்பு நிதியமைச்சருக்கே உண்டு. ஆனால் அவர் வெளிநாடு சென்றிருக்கிறார்.

வெளிநாட்டு நிதியுதவிகள் மற்றும் டொலர் கையிருப்புகள் தொடர்பான ஆவணத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும், இதுவரை அந்த ஆவணங்கள் எதுவுமே சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தினார்.

வெளிநாட்டு நிதியுதவிகள் மற்றும் டொலர் கையிருப்புகள் தொடர்பாக கடந்த மாதம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்குக்கும் வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்டிருந்த வெளிநாட்டு நிதிகள் பற்றிய புள்ளி விபரங்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாகக் கூர்மைச் செய்தித் தளத்தில் கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதி செய்திக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.