வடமாகாணம் மன்னார்

பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

ஆயர் தலைமையில் சிறப்புத் திருப்பலி
பதிப்பு: 2021 டிச. 08 14:22
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 10 21:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுக் காரணமாக பேசாலை ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாத நிலையில் குறித்த பெருவிழா இன்று புதன்கிழமை மிக விமர்சையாக நடைபெற்றது. மேலும் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னான்டோ சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.
 
அத்துடன் மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையில் பேசாலை பங்கு தந்தை வண.பிதா ஏ. ஞானப்பிரகாசம், வண.பிதா எஸ்.எமிலியான்ஸ்பிள்ளை மற்றும் வண.பிதா மார்க்கஸ் அடிகளார் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டாக ஒப்புக் கொடுத்தனர். மேலும் திருப்பலியைத் தொடர்ந்து வெற்றி நாயகி அன்னையின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.

பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய வருடாந்த பெருவிழா கடந்த இரண்டு வருடங்களின் பின் நடைபெற்ற நிலையில் பேசாலை மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அத்துடன் மேற்படி திருவிழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள் மற்றும் ஊர் மக்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக கலந்துகொண்டனர்.

மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பேசாலை நகரம் கத்தோலிக்க தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கரையோரப் பகுதியாகும். மேலும் நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட பேசாலை நகரில் அமைந்துள்ள புனித வெற்றி நாயகி ஆலயம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரிய ஆலயங்களில் ஒன்றாகும். இந்த நிலையில் குறித்த ஆலயத்தின் இவ் வருட பெருவிழா பெரும் விமர்சையாக இடம்பெற்றது.