இலங்கை ஒற்றையாட்சி அரசின்

அந்நியச் செலவாணி 1.5 பில்லியன் டொலர்களாகக் குறைந்தது

இரு வாரங்களுக்குப் போதுமான அத்தியாவசியப் பொருட்களை மாத்திரமே இறக்குமதி செய்யலாம்- மத்திய வங்கி
பதிப்பு: 2021 டிச. 10 19:45
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 11 20:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
தற்போதைய சூழலில் கையில் இருக்கும் இலங்கையின் அந்நியச் செலவாணி 1.5 பில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டப்ளியூ.ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார். இன்னமும் இரண்டு வாரங்களுக்குப் போதுமான அந்நியச் செலவாணியே கையிருப்பில் உள்ளதென்றும் விஜேவர்த்தன கூறியுள்ளார். மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
 
நிதியைக் கோருவதற்கான காலம் பிந்தியுள்ளது என்றும் நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் முன்னரே சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்திருக்க வேண்டுமெனவும் விஜேவர்த்தன கூறியுள்ளார்.

தற்போதைய நிதி நெருக்கடி நிலையின் கீழ் நாட்டின் வெளிநாட்டுச் சொத்துக்களின் கையிருப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பொருளாதாரச் செயற்பாடுகள் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கூறிய அவர், அரசாங்கம் இது தொடர்பாகக் கவனம் செலுத்தியுள்ளதாகவும் விஜேரட்ன தெரிவித்தார்.

கையிருப்பில் உள்ள நிதியைக் கொண்டு இன்னமும் இரண்டு வாரங்களுக்குப் போதுமான அத்தியாவசியப் பொருட்களை மாத்திரமே இறக்குமதி செய்ய முயுமெனவும் விஜேரட்ன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வெளிநாட்டு நிதியுதவிகள் தொடர்பான ஆவணத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் கோரியிருந்தார்.

அதேவேளை, இலங்கை மத்திய வங்கி கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஒக்ரோபர் மாதத்தில் 7.6 சதவீதத்திலிருந்து 2021 நவம்பர் மாதத்தில் 9.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், 2021 ஒக்கேராபரில் 4.8 சதவீதத்திலிருந்து 2021 நவம்பரில் 5.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஒக்ரோபர் மாதத்தில் 12.8 சதவீதத்திலிருந்து 2021 நவம்பர் மாதத்தில் 17.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஒக்ரோபர் மாதத்தில் 5.4 சதவீதத்திலிருந்து 2021 நவம்பரில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு நிதியுதவிகள் மற்றும் டொலர் கையிருப்புகள் தொடர்பாக கடந்த மாதம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்குக்கும் வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்டிருந்த வெளிநாட்டு நிதிகள் பற்றிய புள்ளி விபரங்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாகக் கூர்மைச் செய்தித் தளத்தில் கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதி செய்திக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

இந்தோ- பசுபிக் பாதுகாப்பும் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடும் என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை பிரசுரமாகியிருந்தது.