இலங்கை அரசாங்கத்தின் நிதி நெருக்கடி

பொருட்கள் இறக்குமதி செய்யத் தற்காலிகத் தடை- பசில் அறிவிப்பு

அந்நியச் செலவாணி குறைவடைந்ததே காரணம்
பதிப்பு: 2021 டிச. 14 23:24
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 17 10:00
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கை மத்திய வங்கியில் அமெரிக்க டொலரின் இருப்புக் குறைவடைந்ததால், பொருட்கள் இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார். அந்நியச் செலவாணி 1.5.பில்லியன் டொலர்களாகக் குறைவடைந்ததால், அத்தியாவசியப் பொருட்களை அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே இறக்குமதி செய்ய முடியுமென இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் விஜேவர்த்தன கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூறியிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பசில் ராஜபக்ச இது பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார்.
 
இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவுடன் பொருட்கள் இறக்குமதி செய்வதைத் தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்படுமென பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் கூறிய அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெறுவது குறித்து ஆலோசிப்பதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ச கூறினார்.