வடமாகாணம்

மன்னார் பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் தோல்வி

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களிப்பு
பதிப்பு: 2021 டிச. 28 22:24
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 29 01:03
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆட்சி நிருவாகத்தில் உள்ள மன்னார் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நேற்றுத் திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2022ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தொடர்பான கூட்ட அமர்வு பேசாலையில் உள்ள மன்னார் பிரதேச சபையின் பிரதான செயலகத்தில் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது.
 
இதன்போது மன்னார் பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தவிசாளர் உட்பட 21 சபை உறுப்பினர்களும் குறித்த அமர்வில் கலந்துகொண்டனர். மேலும் தவிசாளரின் தலைமை உரையைத் தொடர்ந்து பிரதேச சபையின் செயலாளர் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சபையில் வாசிக்க முற்பட்டபோது குறித்த வரவு செலவுத் திட்ட அறிக்கையை எதிர்ப்பதாகக் கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபையில் பிரேரணை ஒன்றை முன்வைத்தனர்.

அத்துடன் குறித்த பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்மொழிந்து, வழிமொழிந்தனர். எனினும் ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி சார்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை தாம் ஆதரிப்பதாக தெரிவித்து அதனை முன்மொழிந்தார். இந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்(ஈ.பி.டி.பி) உறுப்பினர் அதனை வழிமொழிந்தார்.

இதனையடுத்து மன்னார் பிரதேச சபையின் தவிசாளரால் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த நிலையில் மன்னார் பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர்கள் என பதினொரு பிரதேச சபை உறுப்பினர்கள் 2022ம்ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

மன்னார் பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தெரிவான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் அடங்கலாக 10 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். எனினும் மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் மேலதிகமான ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.