ராஜபக்ச அரசாங்கத்தின்

அரசியல் மற்றும் நிதி நெருக்கடி- மூன்று அமைச்சர்கள் பதவி விலகத் தயாரென அறிவிப்பு

ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தம்மை பதவி நீக்க முடியுமென்கிறார் அமைச்சர் கம்மன்பில
பதிப்பு: 2021 டிச. 30 22:20
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 01 22:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை ஒருபோதும் மீறவில்லை என்றும் அமைச்சர் பதவிகளில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அமைச்சரவையில் விவாதிக்க வேண்டிய விவகாரங்களை பொதுவெளியில் விமர்சிப்பது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடு என்று கூறுவதானால், அமைச்சரவையில் இரகசியமான தீர்மானங்களை மேற்கொள்வதும் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயல் என்றும் மூன்று அமைச்சர்களும் சுட்டிக்காட்டினர்.
 
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறிப் பொதுவெளியில் அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்கள் பதவி விலகிச் செல்ல முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சமீபத்தில் கூறியமை தொடர்பான தமது நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய போதே மூன்று அமைச்சர்களும் இவ்வாறு தெரிவித்தனர்.

அமைச்சரவையில் இரகசியமான முறையில் சில அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுவதற்கான அங்கீகாரங்கள் பெறப்படுகின்றன. இந்த இரகசியச் செயற்பாடுகள் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறும் செயலாகும்.

ஆனால் அது பற்றிப் பேசாமல், ஒரு சில அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சித்தால், அதனை அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறுவதாகக் குற்றம் சாட்டப்படுவதை ஏற்க முடியாதென அமைச்சர் விமல் வீரவன்ச கூறினார்.

இலங்கைத்தீவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கு இல்லை எனவும், அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை நாம் வெளிப்படையாக தெரிவிப்பதில் எந்த தவறும் இல்லை எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். வாக்குறுதிகளுக்கு மாறாக அரசாங்கம் செயற்பட்டால், அது தொடர்பாக பொது மக்களுக்கு அறிவூட்ட வேண்டிய பொறுப்பு அமைச்சர்களுக்கு உண்டு. அதனை அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறும் செயல் என்று கூற முடியாதெனவும் உதயகம்மன்பில கூறினார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்ற முறையில், அமைச்சர்களின் பதவிகளை மாற்றவோ அல்லது பதவி நீக்கவோ முடியும். வேண்டுமானால் ஜனாதிபதி அவ்வாறு செய்யலாமெனவும் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் கூறினார்.

அரசாங்கம் தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அதேவேளை. அரசியல் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.