முரண்பாடு வலுக்கிறது, இந்தியப்பிரதமருக்குத் தயாரித்த இறுதி வரைபில்

தேசியத்தை மட்டுமல்ல சுயநிர்ணய உரிமையையும் கைவிட்ட கடிதம்

கடிதத்தை ஏற்கும் மனநிலை தமிழரசுக்கட்சிக்கு இல்லை
பதிப்பு: 2022 ஜன. 01 22:39
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 04 23:10
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தை வலியுறுத்தி கடிதம் எழுதுமாறு கோரிய ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற கட்சியின் முன்னெடுப்பில் ஒன்றுகூட்டப்பட்டு இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக 2022 ஜனவரி முதலாம் திகதி இறுதிசெய்திருந்த கடித வரைபில் தமிழரசுக்கட்சியில் தமிழ்த்தேசியம் சார்ந்த பலருக்கு உடன்பாடு இல்லை என்று தெரியவருகிறது. இது தொடர்பாக நீண்டநேரம் புதுவருடநாளன்று விவாதித்த தமிழரசுக்கட்சியினர் தேசியத்தை ஏற்கனவே பெயரளவில் மட்டுமே கொண்டுள்ள தமது கூட்டமைப்பில் தற்போது உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதையும் கைவிட்டுச் செல்வது பொருத்தமில்லை என்று விவாதித்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் கூர்மைக்கு சனிக்கிழமை இரவு தெரிவித்தன.
 
பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை நியாயப்படுத்துவதற்குப் பதிலாக, அதனை அதன் மூலத்தன்மை வழுவாது முழுமையாக அமுல்படுத்திவிட்டு உள்ளக சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் சமஷ்டியை நோக்கி நகருவதே இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வாகத் தாம் கொள்ளமுடியும் என்று சம்பந்தன் தலைமையிலான சுமந்திரன் அணியும் தமிழரசுக்கட்சியின் கொள்கை குறித்த தீவிர ஈடுபாடுள்ள ஏனைய மூத்த அரசியல்வாதிகளும் தீர்மானமாக இருப்பதாகவும் தெரியவருகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

இன்று சனிக்கிழமை, மற்றொரு பிரிவாகத் தமிழரசுக் கட்சி கொழும்பில் கூடி ஆராய்ந்துள்ளது.

இறுதியாக இன்றைய திகதியிடப்பட்டு நேற்றுத் தயாரிக்கப்பட்டிருந்த கடிதம் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதப்பட்டு அதற்கு அடுத்ததாகவே இந்தியப்பிரதமருக்கு முகவரியிடப்படுவதாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.

"இரண்டு நகல்களுமே இன்று எமது பார்வைக்குத் தரப்பட்டன். ஒன்றில் உள்ளக சுயநிர்ணய உரிமை சார்ந்த சமஷ்டியைக் கோருவது இருந்தது. இது 22 ஆம் திகதி தயாரிக்கப்பட்டிருந்த நகல். அடுத்த நகல் இன்று தயாரிக்கப்பட்டிருந்தது. இது சுருக்கமாக எழுதப்பட்டிருந்த வடிவம் என்றும் அதிலே சில விடயங்கள் மாற்றப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

"ஆனால், இன்று தயாரிக்கப்பட்டிருந்த குறுகிய வடிவிலான கடிதத்தில் சுயநிர்ணய உரிமை என்பதே இருக்கவில்லை. கோரிக்கைகள் ஒரே மாதிரியாகவே இருந்தன. பதின்மூன்று பற்றிய கோரிக்கை மட்டும் கொஞ்சம் தெளிவாகப் போடப்பட்டிருந்தது.

"விடயம் என்னவென்றால், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைவிட 2002 டிசம்பர் ஒஸ்லோத் தீர்மானம் அரசியல் தீர்வு என்ற விடயத்தில் மேலும் பலமானது. இந்திய இலங்கை ஒப்பந்தம் தீர்வின் வடிவம் என்ன என்று சொல்லவில்லை. ஆனால், ஒஸ்லோவில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டி என்று சொல்லப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்றைய நகலில் பலருக்கு உடன்பாடு இல்லை," என்று தமிழரசுக்கட்சியின் பெயர் சொல்ல விரும்பாத முக்கிய உறுப்பினர் ஒருவர் கூர்மைக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ நிலைப்பாடு இன்னமும் வெளியுலகத்துக்குச் சொல்லப்படவில்லை என்றும் அறியமுடிகிறது.

இறுதியாகத் தயாரித்த கடித நகல் இலங்கை அரசின் தேவைக்குப் பயன்படக்கூடியதாகவே தெரிகிறது. ஆனால், 22 டிசம்பர் தயாரித்த நகல் கணிசமாக தமிழர் தேசிய நலனைமையப்படுத்தியதாக இருப்பதாகத் தெரிகிறது.

இரண்டு நகல்களிலுமே இலங்கை அரசு அதிகாரப்பரவலாக்கம் செய்வதாகக் கூறி ஒற்றையாட்சிக்குள் அதிகார மையநீக்கத்தையே செய்ய முற்பட்டதாகவும் அதைக்கூடச் சட்டவாக்கத்தில் செய்வதாகச் சொன்னவற்றில் முக்கியமானவற்றைச் செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரியவருகிறது.

எனினும் பதின்மூன்றை உடனடியாக அமுல்படுத்துமாறு கோருவது முதல் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பரவலாக்கம் என்று ஆரம்பிக்கும் ஒரு கோரிக்கையை முன்வைப்பது தமிழர் தேசிய நலனுக்கு உகந்த ஒன்றல்ல என்ற விடயத்தை இவர்கள் சொல்லத் தவறியுள்ளார்கள்.

இந்திய இலங்கை ஒப்பந்தமும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்று கூர்மை நேற்று வெளியிட்ட விரிவான கட்டுரை இதை மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.