வடமாகாணம்

மன்னாரில் கொவிட் நோயாளி மரணம்

மாவட்டத்தில் இதுவரை 35 பேர் மரணம்
பதிப்பு: 2022 ஜன. 03 11:33
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 04 23:10
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் இவ்வருடத்தின் முதலாவது கொவிட் - 19 மரணம் புத்தாண்டின் முதல் நாளான சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இவ்விதம் கொவிட் நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர் 70 வயதுடைய வயோதிபர் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மரணமடைந்த மேற்படி வயோதிபர் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், இவருக்கு ஏற்பட்ட சுகயீனம் கடந்த 30ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டவேளையில், மேற்கொள்ளப்பட்ட பீ. சி. ஆர். பரிசோதனையின் போது இவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை தெரிய வந்ததாகவும் அதிகாரி கூர்மை செய்தி தளத்திற்கு தெரிவித்தார்.
 
அத்துடன் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக புதிய வருடப் பிறப்பின் முதல் நாளான சனிக்கிழமை குறித்த வயோதிபர் மரணமடைந்ததாக மேற்படி வைத்தியசாலையின் அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் இதுவரை 3183 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கடந்த 2020ஆம் ஆண்டு 17 கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் 2021ஆம் ஆண்டு 3166 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொவிட் நோய் தொற்றினால் 35 பேர் உயிரிழந்த நிலையில் இறந்தவர்களின் சடலங்கள் வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.