வடமாகாணம்

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு உத்தரவு

14 பேரும் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிப்பு
பதிப்பு: 2022 ஜன. 07 07:59
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 11 04:05
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணம் மன்னார் மாவட்ட கடற்பரப்பில் கடற்படையினரால் கடந்த 19ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை மன்னார் நீதவான் பி. சிவக்குமார் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஞாயிறு பகல் தலைமன்னார் கடற்பரப்பில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து அங்கு மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப்படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் இந்திய ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை கைது செய்தனர். பின்னர் கைதான இந்திய மீனவர்கள் தாழ்வுபாடு கடற்படையினர் மூலமாக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
 
கைதான மீனவர்கள் கடந்த 20ஆம் திகதி திங்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து மன்னார் மாவட்ட நீதவான் பி. சிவக்குமார் கைதான 12 இந்திய மீனவர்களையும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அன்றைய தினம் உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி இந்திய மீனவர்கள் மன்னார் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட சமயம் அவர்களை கடந்த 5ஆம் திகதி புதன்கிழமை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறான சூழ்நிலையில் கடந்த புதன்கிழமை சிறைச்சாலை அதிகாரிகளினால், மேற்படி 12 இந்திய மீனவர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டவேளை மன்னார் நீதவான் பி. சிவக்குமார் மீனவர்களை விடுதலை செய்யும் படி உத்தரவிட்டார். அத்துடன் குறித்த இந்திய மீனவர்களை கொழும்பு மீரிகான முகாமில் தங்கவைத்து விமான மூலம் இந்தியாவிற்கு அனுப்பிவைக்குமாறும் மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த புதன்கிழமை ஐந்தாம் திகதி மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த 12 மீனவர்களுக்கும் எதிராக, இலங்கை கடல் எல்லைக்குள் குடிவரவுச் சட்டங்களை மீறி அனுமதியின்றி படகு மூலம் கடல் வழியாக நுழைந்தமை, இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை அனுமதியின்றி கடல் வழியாக இலங்கை கடல் எல்லைக்குள் எடுத்துவந்தமை, இலங்கை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை என மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் குறித்த மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையும், கடந்த புதன்கிழமை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேற்படி குற்றச்சாட்டுகளை இந்திய மீனவர்கள் ஒத்துக்கொண்டனர். இந்த நிலையில் மன்னார் நீதவான் பி. சிவக்குமார் மேற்படி இந்தியா மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.