ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கதைப்

பதவி கவிழ்க்கவுள்ளதாக மைத்திரி- சஜித் சூழுரை

ஆனால் இருவரின் கட்சியும் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்குமா?
பதிப்பு: 2022 ஜன. 11 22:04
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 11 23:35
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கோட்டபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பிரதான கட்சிகளும் கூடிச் செயற்படுவது தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வர மறுக்கின்றன. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களை முன்வைக்கின்றன. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு முரண்பட்டு வரும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் ஆட்சி அமைக்குமென அதன் தலைவா் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஆனால் எந்தக் கட்சியோடு இணைந்து ஆட்சியமைக்கப்படும் என்று அவா் கூறவில்லை.
 
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சஜித் பிரேமதாசாவும், இந்த அரசாங்கத்தைப் பதவி கவிழ்த்து ஆட்சியமைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆனால் எந்தக் கட்சியோடு இணைந்து ஆட்சியமைக்கப்படுமென அவர் கூறவிவ்லை.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்தால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தயாரென கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்தைவிட்டு வெளியேறுவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில் அமைச்சர் லசந்த அழகியவண்ண இவ்வாறு கூறியுள்ளார்.

அதேவேளை, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தை அமைக்கும் நோக்கம் இல்லையென கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் நோக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லையென கட்சியின் மூத்த உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். தமது நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்த்த மைத்திரிபால சிறிசேனவுடன் மீண்டும் கூட்டுச் சேர முடியாதெனவும் சரத் பென்சேகா கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெளியேற்ற வேண்டுமென பொதுஜன பெரமுனக் கட்சி உறுப்பினர் பிரமித பண்டார கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

பெதுஜன பெரமுன கட்சியின் மத்திய குழுவில் முடிவு எடுக்கப்படும் எனவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.