இலங்கை ஒற்றையாட்சி அரசின் முன்னாள் ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படலாம்- சுதந்திரக் கட்சி கூறுகின்றது

கோட்டாபய ராஜபக்சவை விமர்சிப்பதே காரணம் எனவும் பகிரங்கக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2022 ஜன. 14 13:50
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 15 19:32
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கோட்டாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசாங்கத்துக்குள் முரண்பட்டுள்ளதால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தமது கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவைக் காரணமின்றிக் கைது செய்ய முடியாதென தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அவர் பகிரங்கமாக முன்வைத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் அரசாங்கத்தையும் விமர்சித்து வருவதால், மைத்திரிபால சிறிசேனவைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கு இரகசியமாகத் திட்டமிடப்படுவதாக தயாசிறி ஜயசேகர கூறினார்.
 
ஆனால் இந்தச் சவாலை எதிர்கொள்ள மைத்திரிபால சிறிசேன தயாராக இருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மக்களைத் திரட்டிப் போராடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேனவைப் பலவந்தமாகச் சிறையில் அடைக்க முற்படுவது யார் என்பது தெரியும். அரசின் முக்கிய பிரநிதிகளா அல்லது வெளியில் உள்ளவர்களா என்பதை தற்போது கூறமுடியாதெனவும் நேரம் வரும்போது வெளிப்படுத்தப்படும் என்றும் தயாசிறி ஜயசேகர கூறினார்.

மைத்திரிபால சிறிசேனவைச் சிறையில் அடைக்க வேண்டும் எனச் சில அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் பாரிய நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனாலும் அரசாங்கத்தின் அராஜகம் அதிகரித்துச் செல்வதால், தொடர்ந்து அங்கம் வகிக்க முடியாதெனவும் கட்சியின் மத்திய குழு விரைவில் முடிவெடுக்குமெனவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ச நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மைத்திரி- ரணில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறிக்கையின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படுவாரா அல்லது வேறு காரணங்களின் அடிப்படையில் கைது செய்யப்படுவாரா என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதுவுமே கூறவில்லை. அவர் கைது செய்யப்படலாமென பரபரப்புத் தகவல் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புவிசார் அரசியல் மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் ஈழத்தமிழர்கள் விவகாரம் ஆகியவற்றைக் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், அமெரிக்க- இந்திய அரசுகளைக் கையாண்டு வருவதால், தென்பகுதியில் அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசாங்கம் சில திடீர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.