தொடர்ச்சியான விலைவாசி உயர்வு

அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீதியில் வழிமறித்து மக்கள் தர்க்கம்

பொருட்களைக் கொள்வனவு செய்ய நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் மக்கள் மத்தியிலும் குழு மோதல்
பதிப்பு: 2022 மார்ச் 22 09:26
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 25 21:10
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்கள், உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் வெவ்வேறுபட்ட விலைகளில் அதிகரித்துச் செல்வதால், ஆத்திரமடைந்த மக்கள் வீதியில் செல்லும் அமைச்சர்கள், அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழிமறித்துத் தர்க்கப்படுகின்றனர். கேகாலை, கன்டி, அம்பந்தோட்டை, போன்ற பல மாவட்டங்களிலும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் வரிசையில் நாட்கணக்கில் காத்திருக்கும் மக்களே வீதியால் செல்லும் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தர்க்கப்பட்டு அவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.
 
பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் பொலிஸாருடனும் மக்கள் தர்க்கப்படுகின்றனர். வரிசையில் காத்திருக்கும் மக்களிடையேயும் குழு மோதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் இராணுவத்தினரும் வர்த்தக மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை, மொனராகல ஆகிய மாவட்டங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருந்த மக்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பலர் காயமடைந்துள்ளனர். நிட்டம்புவ பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் வரிசையில் காத்திருந்த மக்கள் பலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். மக்கள் குழப்பமடைந்துள்ளதால், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதிகளில் செல்ல அச்சமடைகின்றனர்.

இதேவேளை, பத்து மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்சா டி சில்வா கூறியுள்ளார்.