வடமாகாணத்தில் இருந்து

தமிழகம் சென்ற குடும்பங்களின் மன்னாரில் உள்ள உறவினர்களிடம் புலனாய்வுப் பொலிஸார் விசாரணை

கடற்படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் முறைப்பாடு
பதிப்பு: 2022 மார்ச் 24 21:02
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 25 21:10
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு தமிழ் குடும்பங்கள் இலங்கையில் தற்பொழுது நிலவி வரும் கடுமையான பொருளாதாரக் கஷ்டங்களால் அகதிகளாக தமிழகம் சென்றடைந்தனர். இந்த நிலையில் தமிழகம் சென்ற இளம் குடும்ப பெண் ஒருவரின் மன்னாரில் உள்ள தாய் உட்பட குடும்ப உறுப்பினர்கள் சிலர் கடற்படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும், இலங்கை புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது-
 
பேசாலை படகோட்டிகளால் கடந்த திங்கள் இரவு படகில் ஏற்றிச் செல்லப்பட்டு செவ்வாய்கிழமை 22ஆம் திகதி அதிகாலை, இந்தியாவின் தனுஷ்கோடிக்கு அருகாமையில் உள்ள 4ஆம் மணல் தீடையில் அனாதரவாக இறக்கிவிடப்பட்ட 4 மாத கைக் குழந்தை உட்பட அறுவர் இந்தியா கடலோரக் காவற்படையினரால் மீட்கப்பட்டனர்.

மன்னார் எமில்நகரைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குடும்பமொன்றும் மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்த மூவர் அடங்கிய குடும்பமொன்றுமே இவ்விதம் மீட்கப்பட்டவர்களாவர்.

இலங்கையில் தொடர்ச்சியாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் இலங்கையில் உணவுப் பொருட்களை பெறமுடியாது தாம் பட்டினிச் சாவினை எதிர்நோக்கும் அபாயத்தில் இருந்து தப்புவதற்கு தாம் படகு மூலம் தமிழகம் வருகை தந்ததாக மணல் தீடையில் மீட்கப்பட்ட மேற்படி இலங்கை குடும்பத்தினர் தமிழக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள பண வீக்கத்தினால் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, சீனி, கோதுமை மா மற்றும் ஏனைய பாவனைப் பொருட்களும், மண்ணெண்ணை, டீசல்,பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், இலங்கையில் வாழ முடியாது, தாம் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளதாக, தமிழக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தம்மை படகில் ஏற்றிவந்த இலங்கை படகோட்டிகள் அச்சம் காரணமாக தம்மை இடைநடுவே மணல் தீடையில் இறக்கிவிட்டு சென்றதாகவும் இந்த நிலையில் தாம் குறித்த மணல் திட்டில் 4 மாத கைக்குழந்தையுடன் அதிகாலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் பெரும் அவஸ்தைக்கு உள்ளனதாக இந்திய கடலோர காவல் படையினரிடம் மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் அறுவரும் நேற்று செவ்வாய்கிழமை மாலை தமிழகம் மண்டபம் முகாமில் அதிகாரிகளினால் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை செவ்வாய்க்கிழமை படகு மூலம் நான்கு மாத கைக்குழந்தையுடன் தமிழகம் சென்ற மன்னார் எமில்நகரைச் சேர்ந்த இளம் குடும்ப பெண்ணான மேரி கிளாரினின் தாயாரான ரேவதி சிசிலியா, தான் இலங்கை பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவற்றின் புலனாய்வு பிரிவினரால் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

தனது மகள் படகு மூலம் தமிழகம் சென்ற செய்திகள் வெளிவந்த நிமிடத்தில் இருந்து, தனது வீட்டிற்கு சிவில் உடையில் தொடர்ச்சியாக பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினர் வருகை தந்து தனது மகள் தொடர்பில் தன்னை விசாரணைக்கு உட்படுத்தியதாக ரேவதி மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் புலனாய்வுப் பிரிவினர் தனது மகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டதாவும், சிவில் உடையில் வருகை தந்த கடற்படையினர் தன்னையும் தனது உறவினர்கள் சிலரையும் அச்சுறுத்தியதாகவும் ரேவதி சிசிலியா தெரிவித்தார்.

இது இவ்விதம் இருக்க செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இலங்கையின் தமிழர் பகுதியான வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இளம் பெண்கள், மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 10 பேர் மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் அகதிகளாக தமிழகம் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

பயணத்தின் இடைநடுவே ஆழ்கடலில் இவர்கள் பயணித்த படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் பல மணி நேர முயற்சிக்குப் பின் படகோட்டியினால் இயந்திரம் சரி செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை 22ஆம் திகதி இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்தை சென்றடைந்துள்ளன