இந்திய அமைதிப்படைக்கு ஆலோசகராயிருந்த ஜெய்சங்கரிடம் தமிழ்த் தரப்பு கேட்கவேண்டிய கேள்வி

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்னும் அமுலில் இருக்கிறதா? பதிலளிப்பாரா ஜெய்சங்கர்?

காங்கிரஸ் கையாண்ட அதே அணுகுமுறையைத்தான் மோடியும் பின்பற்றுகிறார்
பதிப்பு: 2022 மார்ச் 26 20:57
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 28 23:35
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்திய- இலங்கை ஒப்பந்தம் இன்றுவரை நடைமுறையில் இருக்கின்றதா இல்லையா என்பதை கொழும்புக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பகிரங்கமாகக் கூற வேண்மெனப் பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த ஒப்பந்தத்தின் பிரகாரமே இந்தியா இலங்கையோடு அனைத்து நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றதோ என்றொரு உணர்வு ஈழத்தமிழர்களிடம் உண்டு. தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிடம் கையளிப்பது குறித்து இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணெய்குதங்களை மேலும் ஐம்பது வருடங்களுக்கு இந்தியாவிடம் கையளிப்பதற்காக இந்த வருடம் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
 
தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒருமித்த குரலில் இந்தியாவிடம் கூட்டாகக் கோரிக்கை முன்வைக்கக் கூடாது என்பதைத் தடுக்கப் பிளவுபடுத்தும் உத்திகளை இலங்கை கையாண்டிருக்கின்றது. ஜெய்சங்கர் போன்ற இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகள் பலரை வைத்து இலங்கை காய் நகர்த்தியிருக்கின்றது

ஆனால் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை மையமப்படுத்தியதாகவே இந்தப் புதிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டதா என்பது தொடர்பாக இந்திய- இலங்கை அரசுகள் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

அத்துடன் ஒரு பில்லியன் நிதியுதவிக்கான ஒப்பந்தம் சென்ற புதன்கிழமை புதுடில்லியில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் கைச்சாத்திடப்பட்டபோது, வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் உள்ள பல பிரதேசங்களில் இந்திய முதலீடுகள் மற்றும் அபிருத்தித் திட்டங்களுக்கு இலங்கை இணங்கியுள்ளது.

குறிப்பாக திருகோணமலை துறைமுகத்தைச் சுற்றி இந்தியாவின் மூலோபாய நலன்களை வலுப்படுத்தும் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது தொடர்பாக இலங்கை- இந்தியாவுக்கு சாதகமான சமிக்ஞை வழங்கியுள்ளது.

திருகோணமலையிலுள்ள சம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மன்னார், பூநகரி மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் சூரிய சக்தி திட்டங்களை மேற்கொள்ளவும் இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது அதற்குரிய வேலைத் திட்டங்களை அதானி குடும்பத்திற்கு வழங்க விருப்பம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

IPKF
ஜே. என். டிக்சித் எழுதிய Assignment Colombo எனும் தன்னிலை விளக்க நூலில் ஜெய்சங்கர் தனக்கு உதவியாளராக, 1987 இந்திய இராணுவத்துடன் தொடர்பாடல் அதிகாரியாகக் கடமையாற்றியதாக்க் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வணிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தைபயன்படுத்தவும் இலங்கை உடன்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் கலாசார திட்டங்களைச் செயற்படுத்தவும் இலங்கை இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே இலங்கையுடனான இந்தியாவின் இவ்வாறான அணுகுமுறைகைள நோக்கும்போது, இந்திய- இலங்கை ஒப்பந்தம் இன்னமும் நடைமுறையில் இருக்கின்றதா அல்லது அந்த ஒப்பந்தத்தை மையப்படுத்தி வேறு புதிய உத்திகள் கையாளப்படுகின்றதா என்பது குறித்தே ஜெய்சங்கர் தமது கருத்தை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை விவகாரம் குறித்துக் காங்கிரஸ் அரசாங்கம் கையாண்ட சில அணுகுமுறைகைளை நரேந்திரமோடி அரசாங்கமும் பின்பற்றி வருகின்றது என்பதுடன், 1980 களில் காங்கிரஸ் அரசாங்கத்தில் பணியாற்றிய இராஜதந்திரிகளையும் மோடி அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது. அதுவும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தப் பயன்பாட்டைக் காணக்கூடியதாகவுள்ளது.

குறிப்பாக 1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் தரையிறக்கப்பட்ட இந்திய இராணுவத்தை அமைதிப்படை (The Indian Peace keeping Force - IPKF) என்று பெயரிட்ட இந்திய அரசாங்கம், அதற்கு ஆலோசகராக எஸ்.ஜெய்சங்கர் என்ற இராஜதந்திரியை நியமித்திருந்தது.

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மூத்த இராஜதந்திரியான ஜெய்சங்கர் தற்போது நரேந்திரமோடி அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

1987 இல் வடமாகாணத்துக்கு உணவுக் கப்பலுடன் அனுப்பப்பட்ட இரண்டு இந்திய இராஜதந்திரிகளில், கரிதிப் சிங் பூரி என்ற இராஜதந்திரியே தற்போது பெற்றோலிய மற்றும் எரிசக்தி அமைச்சராகவும் வீடமைப்பு உள்ளூராட்சி சபைகளின் அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.

கரிதிப் சிங் பூரியுடன் உணவுக் கப்பலில் வருகை தந்திருந்த குப்தா என்ற மற்றுமொரு இந்திய இராஜதந்திரியும் 1987 இல் மக்கள் மாலை அணிவித்து வரவேற்று வந்தனர்.

ஆகவே இந்திய இராணுவத்துக்கு ஆலோசகராகப் பணியாற்றிய ஜெய்சங்கர், உணவுக் கப்பலுடன் யாழ்ப்பாணம் வந்த பூரி என்ற இருவரும் 1987 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்திலேயே இராஜதந்திரிகளாகப் பணிபுரிந்தனர்.

இந்த அனுபவப் பின்புலத்திலேயே வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற நாள் முதல், ஜெய்சங்கர் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றார்.

அத்துடன் ராஜபக்ச அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் 13 ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நரேந்திரமோடிக்குக் கடிதம் ஒன்றை ஜனவரி மாதம் 13 ஆம் திகதி அனுப்பியிருக்கவும் வேண்டும். ((இலங்கை அரசின் மறைமுக ஆதரவுடன் 13 பற்றிய பேச்சை செல்வம் அடைக்கலநாதன் அணி முன்னெடுத்ததாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்)

ஜெய்சங்கர், பூரி ஆகியோரின் முயற்சியினாலேயே கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி தமிழ்பேசும் மக்களின் தாயகமான திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் மேலும் ஐம்பது ஆண்டுகளுக்கு இந்தியாவுக்குக் குத்தகைக்கு விடும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.

இந்தியா சொல்வதைக் கேட்பதைவிட ஈழத்தமிழ் மக்களுக்குத் தேவையான அரசியல் தீர்வு உள்ளிட்ட போரின் பக்க விளைவுகளுக்குரிய தீர்வுகள் பற்றியும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்திருந்தால், விரும்பியோ விரும்பாமலோ இந்தியா ஈழத்தமிழர்களின் பக்கம் நின்று குறைந்த பட்ச சமஸ்டி ஆட்சி முறைக்கான அழுத்தங்களையாவது கொடுத்திருக்கும் நிலை நேரிட்டிருக்கலாம்

இவ்வாறான நிலையிலேயே வங்காள விரிகுடாவை மையப்படுத்தி பங்களாதேஸ், பூடான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைக் கொண்ட, பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) மாநாடு இம்முறை கொழும்பில் எதிர்வரும் புதன்கிழமை 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த அமைப்பின் தற்போதைய தலைவரான கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள மாநாட்டில், உறுப்பு நாடுகளின் பிரதமர்கள், ஜனாதிபதிகள் கொழும்புக்கு வருகை தரவுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இம் மாநாட்டில் பங்குகொள்வாரென ஏலவே எதிர்பார்க்கப்பட்ட போதும், ரசிய- உக்ரெயன் போர் உள்ளிட்ட தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அவருடைய வருகை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மோடிக்குப் பதிலாக இந்திய அரசமைப்பின் பிரகாரம் இந்தியப் பிரதமருக்குச் சமனான அந்தஸ்த்துடைய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மாநாட்டில் பங்கேற்பாரென இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜெய்சங்கர் இன்று 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்புக்கு வருகை தந்துமுள்ளார். 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள பிம்ஸெ்டெக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளார்.

நாளை திங்க்கிழமை 28 ஆம் திகதி யாழப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பதினொரு மாடிகள் கொண்ட யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தை திறந்துவைக்கவுள்ளார்.

கொழும்பில் அலரிமாளிகையில் இருந்து கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் சேரந்து இணையவழிமூலம் யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தைத் திறந்துவைக்கவுள்ளார்.

நரேந்திரமோடி பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளவரும்போது யாழ்ப்பாணத்துக்குச் சென்று திறந்து வைப்பாரெனச் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இறுதி நேரத்தில் மோடியின் வருகை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்தவொரு நிலையில் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜெய்சங்கர் கொழும்பில் இருந்துகொண்டே இணையவழி மூலம் திறந்துவைக்கவுள்ளதாக யாழ் மாநகர சபைத் தகவல்கள் கூறுகின்றன.

ஆகவே இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கையில் புவிசார் அரசியல் நோக்கில் நகர்வுகளை முன்னெடுத்துவரும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் இலங்கை குறித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் கொள்கைகள், திட்டங்களுக்கு ஏற்பவே செயற்பட்டு வருகின்றது என்பது பட்டறிவு.

இந்திய அமைதிப்படை என்ற பெயரில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிலைகொண்டிருந்த 1987-88-89 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் இந்தியத் தூதுவராகக் கடமையாற்றிய ஜே.என்.டிக்சிற்றின் கீழ் ஜெய்சங்கர், கரிதிப் சிங் பூரி ஆகிய இருவரும் இராஜதந்திரிகளாகப் பணியாற்றியிருக்கின்றனர்.

இந்திய இராணுவத்தின் ஆலோசகராக ஜெய்சங்கர் பணியாற்றியதாக ஜே.என்.டிக்சிற் அசைமென்ற கொழும்பு (Assignment Colombo) என்ற தனது நூலில் 283 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்சங்கர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். இருந்தாலும் அவர் அதிகமாக புதுடில்லியிலேயே வாழ்ந்திருக்கிறார். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் இந்தியாவுக்கான தூதுவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் ரசிய மொழியும் பேசும் ஆற்றல் உள்ள ஜெய்சங்கர், இந்திய வெளிநாட்டு இராஜதந்திர சேவையில் மூத்த இராஜதந்திரியாவார்.

ஆகவே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஈழத்தமிழர் விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு இந்திய இராஜதந்திரிகள் சுமார் முப்பது ஆண்டுகளின் பின் தற்போது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர்.

ஆகவே ஈழத்தமிழர் விவகாரங்களில் இந்திய அரசின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையின் பிரகாரமே நரேந்திரமோடி அரசாங்கம் செயற்பட்டிருக்கின்றது என்பது வெளிப்படை.

ஆனால் ஈழத்தமிழர் விவகாரத்தில் நீண்ட அனுபவமுள்ள ஜெய்சங்கர் போன்ற இராஜதந்திரிகளைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் தலைவர்கள் ஆரம்பம் முதலே சந்தித்து வந்திருந்தால், இந்தியாவைக் கையாண்டிருக்கலாம். ஆனால் இலங்கை அரசாங்கம் ஜெய்சங்கர் போன்றோரை நன்கு பயன்படுத்தியிருக்கின்றது.

இந்தக் காய் நகர்த்தல்கள் தமிழ்த்தேசியக் கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டியவை. ஆனால் இன்று இலங்கை அதனை கையிலெடுத்திருக்கின்றது

இந்தியா சொல்வதைக் கேட்பதைவிட ஈழத்தமிழ் மக்களுக்குத் தேவையான அரசியல் தீர்வு உள்ளிட்ட போரின் பக்க விளைவுகளுக்குரிய தீர்வுகள் பற்றியும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்திருந்தால், விரும்பியோ விரும்பாமலோ இந்தியா ஈழத்தமிழர்களின் பக்கம் நின்று குறைந்த பட்ச சமஸ்டி ஆட்சி முறைக்கான அழுத்தங்களையாவது கொடுத்திருக்கும் நிலை நேரிட்டிருக்கலாம்.

தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒருமித்த குரலில் இந்தியாவிடம் கூட்டாகக் கோரிக்கை முன்வைக்கக் கூடாது என்பதைத் தடுக்கப் பிளவுபடுத்தும் உத்திகளை இலங்கை கையாண்டிருக்கின்றது. ஜெய்சங்கர் போன்ற இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகள் பலரை வைத்து இலங்கை காய் நகர்த்தியிருக்கின்றது.

இந்தக் காய் நகர்த்தல்கள் தமிழ்த்தேசியக் கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டியவை. ஆனால் இன்று இலங்கை அதனை கையிலெடுத்திருக்கின்றது.

ரசிய- உக்ரெய்ன் ரசிய போரின் பின்னரான சூழலில் இந்தியா மீண்டும் 1980 களில் பனிப்போர் காலத்தில் கையாண்ட அதே அணுகுமுறையைத்தான் அமெரிக்க, சீன மற்றும் ரசிய அரசுகளோடு நின்று இந்தியா கையாளும் நிலைமை உருவாகி வருகின்றது.